சென்னை: தமிழ்நாடு அரசு ஆர்எஸ்எஸ் ஊர்வலம் பேரணி நடத்த அனுமதி மறுத்த நிலையில், உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதையடுத்து நேற்று தமிழ்நாடு முழுவதும் கோவை உள்பட 55 இடங்களில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் பேரணி எந்தவித அசம்பாவிதம் இன்று வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த பேரணியில் பல ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
கடந்த விஜயதசமி நாளில் தமிழ்நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த தமிழ்நாடு அரசிடம் அனுமதி கோரியது. ஆனால், தமிழ்நாடு அரசு, ஆர்எஸ்எஸ் பேரணி நடத்தினால், மத ஒற்றுமை சீர் குலையும், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என கூறி தடை போட்டு வந்தது. இதை எதிர்த்து நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் வழக்கு தொடர்ந்தது. அதன்படி, பல்வேறு முட்டுக்கட்டைகளை தாண்டி உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியதும், காவல்துறை தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வந்தது. இதையடுத்து, ஆர்எஸ்எஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றத்தில், ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதி வழங்கியதுடன், தமிழ்நாடு காவல்துறை பாதுகாப்பு வழங்கவும் அதிரடி உத்தரவிட்டது.
இந்த உத்தரவின் அடிப்படையில் தமிழ்நாட்டில் மொத்தம் 55 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். இயக்க ஊர்வலம் நடைபெற்றது. சென்னையில் 3 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி வெற்றிகரமைக நடைபெற்றது. குரோம்பேட்டை, கொரட்டூர் மற்றும் மணலி ஆகிய 3 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்தப்பட்டது. கொரட்டூரில் டாக்டர் நல்லிகுப்புசுவாமி விவேகானந்தா வித்யாலயா ஜூனியர் காலேஜில் இருந்து மாலை 3.30 மணியளவில் அணிவகுப்பு ஊர்வலம் தொடங்கியது. பக்தவச்சலம் காலேஜ் ரோடு, ஆர்.கே. அவென்யூ ரோடு, ரயில்வே ஸ்டேஷன் ரோடு மற்றும் பஸ் ஸ்டாண்ட் ரோடு என சுமார் 3.30 கி.மீ. தூரம் சுற்றி வந்த அணிவகுப்பு ஊர்வலம், மாலை 4.45 மணியளவில் மீண்டும் விவேகானந்தா வித்யாலயா ஜூனியர் காலேஜிலேயே நிறைவடைந்தது. தொடர்ந்து, அங்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு தமிழ் சேவா சங்கத்தின் அறங்காவலரும், பறையர் பேரியக்கத்தின் தலைவருமான சே.சிவகுரு பறையனார் தலைமை வகித்தார். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தென்பாரத மக்கள் தொடர்பாளர் பிரகாஷ் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் கம்மவார் நாயுடு சங்கத்தின் துணைத் தலைவர் வி.எம்.பிரபாகரன், அகில இந்திய நாடார் கூட்டமைப்பு கல்விக்குழுத் தலைவர் பிரபாகரன் நாடார், தேசிய யாதவ மகாசபா மாநிலச் செயலாளர் குணசீலன் யாதவ், ரெட்டி நலச்சங்க அலுவலகச் செயலாளர் செல்வராஜ் ரெட்டி, பாரம்பரிய ஸ்தபதிகள் சிற்பக் கலைஞர்கள் சங்கச் செயலாளர் சுந்தர மூர்த்தி ஸ்தபதி, பதிவு பெற்ற தமிழ்நாடு பிராமணர் சங்க கொரட்டூர் கிளைத் தலைவர் மற்றும் திருவள்ளூர் மாவட்டத் துணைத் தலைவர் கணேசன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டனர். அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த 1,300 பேர் கலந்துகொண்டனர்.
மணலியில் மாத்தூர் எம்.எம்.டி.ஏ. 2-வது பிரதான சாலையிலுள்ள ஸ்ரீராம் மஹால் அருகில் இருந்து மாலை 3.30 மணியளவில் அணிவகுப்பு ஊர்வலம் தொடங்கியது. இந்த ஊர்வலம், 3-வது பிரதான சாலை, சின்னமாத்தூர் வழியாக சுமார் 3 கி.மீ. தூரம் சுற்றி வந்து, சுமார் 4.30 மணியளவில் மீண்டும் மாத்தூர் எம்.எல்.டி.வில் நிறைவடைந்தது. பின்னர் அங்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு சென்னை சன்மார்க்கநேசன், சிந்தனை மருத்துவர் எம்.ஏ.உசேன் தலைமை வகித்தார். டி.எஸ்.எஸ். நாடார்கள் ஐக்கிய சங்கத்தின் திருவொற்றியூர் தலைவர் ஆர்.பி.மனோகரன், அகில பாரதீய சத்ரிய மகாசபாவின் மாநிலத் தலைவர் டாக்டர் எம்.கே.குணா, இந்திய மீனவர் சங்கத் தலைவர் டாக்டர் எம்.டி. தயாளன், சென்னை உயர் நீதிமன்ற சீனியர் வழக்கறிஞர் எஸ்.ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.‘ ஆர்.எஸ்.எஸ். மாநில இணை அமைப்புச் செயலாளர் ஸ்ரீ பிரசோபகுமார் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆர்.எஸ்.எஸ். சென்னை கோட்டத் தலைவர் எஸ்.சந்திரசேகர் செய்திருந்தார். இந்த ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த 760 பேர் உட்பட சுமார் 1,000 பேர் கலந்துகொண்டனர்.
கோவை துடியலூர் பேருந்து நிலையம் அருகே நேற்று ஆர்.எஸ்.எஸ். பேரணி நடந்தது. கோவை மாவட்ட தேவர் பேரவை தலைவர் சுந்தரம் கொடி அசைத்து அணிவகுப்பை தொடங்கி வைத்தார். துடியலூர் பேருந்து நிலையம் அருகே தொடங்கிய அணிவகுப்பு சேரன் காலனி, விஸ்நாதபுரம் வழியாக பொருட்காட்சி மைதானத்தில் நிறைவடைந்தது. குழந்தைகள் உள்பட சீருடை அணிந்தபடி 700 பேர் பங்கேற்றனர். அங்கு பொதுக்கூட்டம் நடந்தது. ஸ்ரீ நவசக்தி மஹா வாராஹி அம்மன் ஆலயத்தின் ஸ்ரீ வாராகி மணிகண்ட சுவாமிகள் ஆசியுரை வழங்கினார். ஆர்எஸ்எஸ் தென் தமிழக இணை அமைப்பாளர் சுரேஷ்குமார் சிறப்புரையாற்றினார்.
இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், பாஜக மாநில துணைத் தலைவர் கனகசபாபதி, மாநில பொருளாளர் எஸ்ஆர் சேகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பொள்ளாச்சி அடுத்த கோட்டூர் பேருந்து நிலையத்தில் நேற்று தொடங்கிய ஊர்வலம் குமரன் கட்டம், பேரூராட்சி அலுவலக வீதி வழியாக சென்று தனியார் திருமண மண்டபத்தில் நிறைவடைந்தது.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தில் வெள்ளை சட்டை, காக்கி பேண்ட் அணிந்து அணிவகுத்து வந்த ஆர்எஸ்எஸ் தொண்டர்களை பொதுமக்கள் மலர்தூவி வரவேற்றனர். கோட்டூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் தர்மாம்பிகை, ப்ராந்த் சேவா ப்ரமுக் (தென் தமிழ்நாடு) நிர்வாகி ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திருப்பூர் மாவட்டம் ஆலங்காடு பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் அவிநாசி திருப்புகளியூர் வாட்சர் மடாலய ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ காமாட்சி தாச சுவாமிகள் கலந்து கொண்டு அணிவகுப்பு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். ஆலங்காட்டில் தொடங்கி கருவம்பாளையம் மேற்கு பிள்ளையார் கோயில், எருக்காடு வீதி, கேவிஆர் நகர், செல்லம் நகர் வழியாக சென்று தனியார் பள்ளியில் ஊர்வலம் நிறைவடைந்தது.
நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரியில் நடைபெற்ற ஊர்வலத்தில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். டானிங்டன் பகுதியில் தொடங்கி காமராஜர் சதுக்கம், மார்க்கெட் சாலை, பேருந்து நிலையம், வட்டாட்சியர் அலுவலகம் வழியாக சென்று ராம்சந்த் சதுக்கத்தில் நிறைவடைந்தது. நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சுந்தரவடிவேல் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த ஊர்வலத்தையொட்டி, கோத்தகிரி நகரப் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, உடன்குடி பகுதிகளிலம், கன்னியாகுமரி மாவட்டம் கூனாலுமூடு, கோவை மாவட்டம் துடியலூர், கோட்டூர், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல்,திருப்பூர் உடுமலை, நீலகிரி கோத்தகிரி, சேலம் மரவனேரி உள்ளிட்ட இடங்களில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் ஊர்வலம் நடத்தப்பட்டது.
முன்னதாக, திருச்சியில் ஆர்.எஸ்.எஸ். பேரணியில் பங்கேற்க முயன்ற பாஜக தேசிய சிறுபான்மை செயலாளர் இப்ராஹிம் போலீசாரால் முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்டார். மேலும் பலரை ஏற்கனவே பல்வேறு வழக்குகளில் காவல்துறை கைது செய்திருந்த நிலையில், காவல்துறை அச்சுறுத்தலை கடந்த, வெற்றிகரமாக எந்தவித அசம்பாவிதம் இன்றி நடைபெற்றது.