போபால்:
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலையை துண்டிப்பவருக்கு ஒரு கோடி வெகுமானம் என்று ஆர் எஸ் எஸ் தலைவர் அறிவித்திருப்பது
பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் பல ஆண்டுகளாக ஆர் எஸ் எஸ் அமைப்பினருக்கும், மார்க்ஸிஸ்ட் கட்சித் தொண்டர்களுக்கும்
இடையே முட்டல் மோதல் நடந்து வருகிறது. எண்ணற்ற கொலைகளும் நடந்துள்ளன. மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததும்
இந்துத்துவா சக்திகளின் கை இயல்பாகவே மேலோங்கியுள்ளது. இதேபோல் கேரளாவில் மார்க்ஸிஸ்ட் தலைமையிலான அரசு
பொறுப்பேற்றதும் இடதுசாரிகளின் கை ஓங்கியுள்ளது.
அதனால் அங்கே இரு அமைப்பினரிடமும் பகையுணர்வு நீருபூத்த நெருப்பாகவே
உள்ளது. கடந்தவாரம் கர்நாடக மாநிலம் மங்களூருவில் நடைபெற்ற மதநல்லிணக்க கூட்டத்தில் பேசிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்,
மக்களிடம் மத உணர்வுகளை தூண்டிவிட்டு
பாஜக குளிர்காய நினைக்கிறது என்றும் பிரதமர் மோடி ஆர் எஸ் எஸ்-ன் ஆலோசனை கேட்டு நடப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.
மேலும் அவர்,
காந்தியை திட்டம்போட்டு கொன்றவர்கள் ஆர் எஸ் எஸ் அமைப்பினர் என்றும், காந்தி கொல்லப்பட்டதும்
இனிப்பு வழங்கி கொண்டாடினர் என்றும் குற்றஞ்சாட்டினார்.
பினராயி விஜயனின் இந்தப்பேச்சு இந்துத்துவா அமைப்புகளில்
பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இன்று மத்தியபிரதேசத்தைச் சேர்ந்த சந்திரவாட் என்ற ஆர் எஸ் எஸ் தலைவர், பினராயி விஜயனின் தலையை
கொண்டுவருவோருக்கு ஒரு கோடி ரூபாய் சன்மானம் என்று அறிவித்துள்ளார். தன் சொத்துகள் அனைத்தையும் தலையை வெட்டியவருக்கு எழுதி வைக்கதயார்
என்று கூறியுள்ளார். சந்திரவாட்டின் இந்த அதிரடி பேச்சு
கேரளாவில் மட்டுமல்லாது இந்திய அளவில் சர்ச்சைக்குரிய விவாத பொருளாக மாறியுள்ளது.