டில்லி

முன்னாள் ஆர் எஸ் ஏஸ் பிரமுகர் கோவிந்தாசார்யா தனது 2019 ஆம் வருட மனுவை பெகாசஸ் வழக்குடன் விசாரிக்க உச்சநீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

மத்திய அரசு பெகாசஸ் மென்பொருள் மூலமாக ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள், பத்திரிகையாளர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட பலரது செல்போன் உரையாடல்களை ஒட்டுக் கேட்டதாக புகார் எழுந்தது.  இது குறித்து நாடாளுமன்ற கூட்டத் தொடரில் விவாதிக்க மத்திய பாஜக அரசு மறுத்தது.   எதிர்க்கட்சிகள் அமளியால் கூட்டம் நடைபெறவில்லை.

இந்நிலையில் இந்த ஒட்டுக் கேட்பு விவகாரம் குறித்து 10 வழக்கு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.  அவற்றைத் தலைமை நீதிபதி என் வி ரமணா தலைமையிலான அமர்வு விசாரிக்க உள்ளது.  இந்த மனுக்களைப் பிரபல பத்திரிகையாளர்கள் என் ராம், உள்ளிட்டோர் அளித்துள்ளனர்.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஆர் எஸ் எஸ் பிரமுகர் கோவிந்தாசார்யா ஒரு மனுவை அளித்திருந்தார்.  அதில் அவர் முகநூல், வாட்ஸ்அப், மற்றும் பல குழுவில் விவரங்கள் திருடப்பட்டது குறித்து விசாரிக்க மனு அளித்திருந்தார்.   இந்த விவகாரத்தை அவர் இணைய தள பயங்கரவாதம் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் கோவிந்தாசார்யா உச்சநீதிமன்றத்தை பெகாசஸ் வழக்குடன் தனது 2019 ஆம் வருட மனுவையும் விசாரிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.  மேலும் கோவிந்தாசார்யா, “பெகாசஸ் மூலம் ஒட்டுக் கேட்கப்பட்ட  பிரபலங்கள் பெயர்களை அறியும் போது பொதுமக்கள் மத்தியில் தங்கள் சுதந்திரம் குறித்து கடும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

இது போன்ற ஒரு சட்ட விரோதமான கண்காணிப்பு பொதுமக்களின் சுதந்திரத்துக்கு மட்டுமின்றி உயிர் வாழ்வதற்கும் மிரட்டல் விடுக்கப்படுவதாகும்.  எனவே ஒரு பாரபட்சமற்ற  பொறுப்பான விசாரணை அவசியமாகும்.   இதன் மூலம் மக்களின் அடிப்படை உரிமைகளே பறிக்கப்படுவது மிகவும் தவறான ஒன்றாகும். ” எனத் தெரிவித்துள்ளார்.