2006 ம் ஆண்டு நான்டெட் குண்டுவெடிப்பு குறித்து மும்பையில் உள்ள நான்டெட் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு தொடர்பாக ஆர்எஸ்எஸ் நிர்வாகி ஒருவர் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக-வின் தேர்தல் வெற்றிக்காக ஆர்எஸ்எஸ் நாடு முழுவதும் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தது என்று அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பிரமாண பத்திரத்தின் சில பகுதிகளை காங்கிரஸ் கட்சியின் ஊடப்பிரிவு தேசிய தலைவர் பவன் க்ஹெரா தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

அந்த பிரமாண பத்திரத்தில், தான் ஒரு ஆர்எஸ்எஸ் பிரமுகர் என்று கூறிக்கொண்ட யஷ்வந்த் ஷிண்டே, நாடு முழுவதும் தொடர் குண்டுவெடிப்புகளை வெடிக்கச் செய்தது ஆர்எஸ்எஸ் மற்றும் அதைச் சார்ந்த அமைப்புகள்தான் என்றும், குண்டுவெடிப்புக்கான பயிற்சி முகாம்களில் தானும் இருந்ததாகவும் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

குண்டுவெடிப்புத் திட்டத்தின் பல நிலைகளில் பங்கேற்ற ஆர்எஸ்எஸ் மற்றும் விஎச்பி நிர்வாகிகள் சிலரின் பெயரையும் ஷிண்டே குறிப்பிட்டுள்ளார்.

இந்திரேஷ் குமார், ஹிமான்ஷு பான்சே, மிலிந்த் பரண்டே, ராகேஷ் தவாடே, ரவி தேவ் (மிதுன் சக்ரவர்த்தி) ஆகியோர் இந்த வழக்கில் முக்கிய சதிகாரர்கள் என்று பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மிலிந்த் பரண்டே மற்றும் ராகேஷ் தவாத் ஆகியோர் ஏற்பாடு செய்த பயிற்சி முகாமில் ரவி தேவ் ​​வெடிகுண்டு தயாரிப்பில் பயிற்சி அளித்ததாக கூறியுள்ளார்.

இந்துத்துவாவில் தீவிர நம்பிக்கை கொண்டவர் என்றும், இந்து மதத்தை உன்னதமான மதம் என்றும் குறிப்பிட்டுள்ள ஷிண்டே இந்து மதம் பயங்கரவாதத்திற்கு எதிரானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கொடூரமான குற்றங்களில் ஈடுபட தான் விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ள ஷிண்டே. அந்த அமைப்பில் உள்ள தனக்கு தெரிந்தவர்களிடம் குண்டுவெடிப்புகளில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாகவும் கூறினார்.

“நாடு முழுவதும் குண்டுவெடிப்புகளை ஏற்படுத்தும் ஆர்எஸ்எஸ் மற்றும் விஎச்பியின் திட்டம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாததால், பாஜகவுக்கு அரசியல் பலன் கிடைக்கவில்லை. அதன் விளைவாக, 2004 தேர்தலில், காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையைப் பெற்றது.

மிலிந்த் பரண்டே போன்ற முக்கிய சதிகாரர்கள் தலைமறைவாக இருந்து கொண்டு ரகசியமாக சதித்திட்டங்களைத் தொடர்ந்தனர், நாடு முழுவதும் பல குண்டுவெடிப்புகளை நடத்தினர் மேலும் காவல்துறை மற்றும் ஒருதலைப்பட்சமான ஊடகங்களின் உதவியுடன் அவர்கள் முஸ்லிம்கள் மீது குற்றம் சாட்டினர். அது அவர்களுக்கு 2014 மக்களவைத் தேர்தலில் உதவியது” என்று அந்த பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

பிரமாணப் பத்திரத்தின்படி, 2014-ல் பாஜக மத்தியில் ஆட்சியைக் கைப்பற்றி நரேந்திர மோடி பிரதமரானார். இதன் விளைவாக பாஜக-வின் பின்புலத்தில் செயல்பட்டு வந்த விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்எஸ்எஸ்) ஆகிய அனைத்து அழிவு சக்திகளும் திடீரென முன்களத்திற்கு வந்தன.

2006 ஆம் ஆண்டு நான்டெட் குண்டுவெடிப்பு வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள மூன்று பேர் முக்கிய சதிகாரர்கள் என்றும், அவர்களை சட்டத்தின் முன் நிறுத்துமாறும் ஷிண்டே தனது வாக்குமூலத்தில் கோரியுள்ளார்.