சென்னை
திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி திமுகவுக்கும் ஜாபர் சாதிக்குக்கும் எந்த தொடர்பும் இல்லை எனக் கூறி உள்ளார்.
நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி செய்தியாளர்களிடம்.
”தமிழகத்தில் போதைப்பொருள் அதிகமாக உள்ளதாகத் தவறான தகவல்களை எடப்பாடி பழனிசாமி பரப்பி வருகிறார். இவ்வாறு தொடர்ந்து தவறான தகவல் பரப்புவதால் எடப்பாடி பழனிசாமி மீது ரூ.1 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளோம். முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் போதைப்பொருள் நடமாட்டத்திற்கும் தொடர்பு இருக்கிறது எனத் தவறான எண்ணத்தைப் பொதுமக்கள் மத்தியில் பரப்பி வருகிறார்.
தமிழகத்தில் யாருடைய ஆட்சியில் போதைப் பொருட்கள் புழக்கம் அதிகம் இருந்தது என்பது அனைவருக்கும் தெரியும். முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் போதைப்பொருள் தொடர்பான வழக்குகளில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆனால் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்ததை, 3 ஆண்டுகளில் தி.மு.க. அரசு பெருவாரியாக கட்டுப்படுத்தியுள்ளது.
தி.மு.க.வுக்கும் ஜாபர் சாதிக்கிற்கும், எந்த தொடர்பும் இல்லை. கடந்த 2013 ஆம் ஆண்டு ஜாபர் சாதிக் மீது அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது வழக்கு தொடரப்பட்டு, எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது 2017 -ஆம் ஆண்டில் ஜாபர் சாதிக் விடுதலை செய்யப்பட்டார். அவர் போதைப்பொருள் விவகாரத்தில் தி.மு.க.வின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்த முயல்கின்றார். திமுக தேர்தலில் பெறப்போகும் வெற்றியால் எதிர்க்கட்சிகள் கலக்கமடைந்துள்ளன”.
என்று கூறியுள்ளார்.