வேலுார்: மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கியதாக கூறி ரூ.97 லட்சம் மோசடி செய்த வேலூர் அருசேக உள்ள குடியாத்தம் மத்திய கூட்டுறவு பெண் வங்கி மேலாளர் கைது செய்யப்பட்டார். அவரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

வேலூர் அருகே உள்ள குடியாத்தம் கூட்டுறவு வங்கியின் மேலாளராக இருந்தவர் மகேஸ்வரி. இவர் வேலுார் மாவட்டம், வேலுார் அரியூரை சேர்ந்தவர். கடந்த 2018- 19ம் ஆண்டுகளில் குடியாத்தம் கிளையில் மேலாளராக பணியாற்றிய போது, மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு கடன் வழங்கியதாக போலி ஆவணங்கள் தயாரித்து 97 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் மோசடி செய்தது வங்கி தணிக்கையில் தெரியவந்தது.

இதுகுறித்து, கூட்டுறவு சங்க துணை பதிவாளர் அருட்பெருஞ்ஜோதி கொடுத்த புகாரின் பேரில், வேலுார் மாவட்ட வணிக குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், உமா மகேஸ்வரி போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்ததும், மோசடி செய்த பணத்தில் சென்னை, வேலுார், காட்பாடியில் வீடு, வீட்டு மனை வாங்கியதும் உறுதியானது. அதையடுத்து, வணிகவரித்துறை குற்றப்பிரிவு போலீசார் அவரை  கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட உமாமகேஸ்வரி, வேலுார் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.