சென்னை தி. நகரில் ஸ்மார்ட் சிட்டி பெயரில் 900 கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
2021 ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒரேநாள் மழையில் சென்னையின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி போக்குவரத்து ஸ்தம்பித்தது.
இதனையடுத்து 2017 – 2021 ம் ஆண்டு வரை சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் குறித்து ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி PWC டேவிடார் தலைமையிலான குழு ஆய்வு மேற்கொண்டது.
இந்த காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்பு திட்டங்களில் தி.நகரில் நடைபெற்ற ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு மட்டும் 40 சதவீத நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வெங்கட்நாராயணா சாலையில் பாதசாரிகளுக்கான நடைபாதை அமைக்க ரூ.30 கோடி, உஸ்மான் சாலையில் பாதசாரிகளுக்கான நடைபாதை அமைக்க ரூ.30 கோடி, புர்கிட் சாலையில் பாதசாரிகளுக்கான நடைபாதை அமைக்க ரூ.7 கோடி என இல்லாத திட்டங்களுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்ததாகக் கணக்கு காட்டப்பட்டுள்ளது.
2020 இல் மழைநீர் வடிகால்களை அமைக்க ரூ. 172 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும் 2021 இல் சென்னை நகரம் ஒருநாள் பெருமழைக்கே வெள்ளக்காடானது.
தவிர, மாம்பலம் கால்வாயை சுத்தப்படுத்தி சைக்கிள் ஓட்டும் தடம் மற்றும் பசுமையான நீர்வழிப் பாதை ஆகியவற்றுக்கு ரூ. 30 கோடி செலவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது ஆனால் இந்த மாம்பலம் கால்வாயின் இன்றைய நிலையைப் பார்த்தாலே மக்கள் பணம் எப்படி வீணடிக்கப்பட்டுள்ளது என்பது புரியும்.
இந்த விவகாரத்தில் சென்னை மாநகராட்சி முன்னாள் தலைமை பொறியாளர் ஐ. நந்தகுமார் ஓய்வுபெறுவதற்கு முதல் நாள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். ஆனால் இதுவரை சென்னை மாநகராட்சியின் முன்னாள் ஆணையர், துணை ஆணையர், இணை ஆணையர் என்று வேறு எந்த ஒரு அதிகாரி மீதும் நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை.
ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் 900 கோடி ரூபாய் வரை மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்பட்ட விவகாரத்தில் PWC டேவிடார் 2022 ஆகஸ்ட் மாதம் தனது அறிக்கையை சென்னை மாநகராட்சியிடம் சமர்ப்பித்துள்ள போதும், இதுவரை அந்த அறிக்கையை பொதுவெளியில் வெளியிடாமல் மாநகராட்சி ரகசியம் காத்து வருவது பல்வேறு தரப்பினரிடையே கேள்வி எழுப்பியுள்ளது.