2வது தவணை கொரோனா நிதி – ரூ.890.32 கோடி விடுவிக்க மத்திய அரசு அனுமதி!

Must read

புதுடெல்லி: மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு, இரண்டாவது தவணை கொரோனா நிவாரண நிதியாக ரூ.890.32 கோடியை விடுவிக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக நிதியமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ், இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதுடன், பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. கொரோனா நெருக்கடியால் மாநில அரசுகளுக்கு வருமானம் குறைந்துள்ளதால், மத்திய அரசிடமிருந்து நிவாரண நிதியைக் கோரியிருந்தன.

கடந்த ஏப்ரல் மாதம், முதல் தவணையாக ரூ.3 ஆயிரம் கோடியை, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு அளித்தது.

இந்நிலையில், தமிழகம், மராட்டியம், உத்திரப்பிரதேசம், ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, கேரளா உள்ளிட்ட 22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு, இரண்டாவது தவணை கொரோனா நிவாரண நிதியாக ரூ.890.32 கோடியை விடுவிக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம், மருத்துவப் பரிசோதனைக்கான பொது சுகாதாரக் கட்டமைப்பு வசதிகளை பலப்படுத்த இந்த இரண்டாவது தவணை நிதி செலவிடப்படும் என தெரிவித்துள்ளது. மேலும், பிசிஆர் சாதனங்கள் கொள்முதல், திறன் வளர்த்தல், சுகாதார அலுவலர்கள் மற்றும் ஆஷா திட்ட தன்னார்வலர்கள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்குவதற்கு இந்த நிதி பயன்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

More articles

Latest article