திருவாரூர் :

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் பட்டப்பகலில் துப்பாக்கியை காட்டி ரூ.8 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இன்று மதியம் ஆட்கள் குறைவாக இருந்த நேரத்தில் வங்கிக்குள் நுழைந்த 5 மர்ம நபர்கள், துப்பாக்கியை காட்டி ரூ.8 லட்சம் பணம், 3 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்து விட்டு, காரில் தப்பியோடி உள்ளனர்.

அத்துடன், தங்களை யாரும் அடையாளம் கண்டுபிடித்து விடக் கூடாது என்பதற்காக வங்கியில் இருந்த சிசிடிவி கேமிராக்களையும் பெயர்த்து எடுத்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மன்னார்குடியில் உள்ள தமிழ்நாடு மெர்கென்டைல் வங்கியில்  நகைகளை அடகுவைப்பது, திருப்புவது போன்ற பணிகள்  தினந்தோறும் பண பரிமாற்றம் செய்வது என நடப்பது வழக்கம். இந்நிலையில் இன்று  மதியம் நேரத்தில் வாடிக்கையாளர்கள் குறைவாக இருந்த நேரத்தில் வங்கிக்குள் புகுந்த கொள்ளைக்கும்பல், வங்கி மேலாளர் கோவிந்தராஜ் உள்ளிட்ட வங்கி ஊழியர்களை துப்பாக்கி காட்டி மிரட்டி தாக்கினர்.

இதையடுத்து அங்கிருந்த 10 பவுன் நகை உள்பட ரூ. 8 லட்சம் பணத்தை கொள்ளையடித்தனர். பிறகு அங்கிருந்து கண்காணிப்பு கேமராக்களையும் எடுத்துக் கொண்டு சென்றுவிட்டனர்.

இதையடுத்து தகவலறிந்த மன்னார்குடி போலீஸார் சம்பவம் இடத்துக்கு சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர். வங்கியை சுற்றியுள்ள இடங்களில் சிசிடிவி கேமராக்கள் உள்ளனவா என்றும் ஆராய்ந்து வருகின்றனர்.

சமீபத்தில் சென்னையில் பட்டப்பகலில் வங்கி கொள்ளையடிக்கப்பட்ட நிலையில், தற்போது மன்னார்குடியில் பட்டப்பகலில் கொள்யடிப்பு நடைபெற்றிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் பெருகி வரும் நிலையில், காவல்துறையினர் சரிவர நடவடிக்கை எடுக்காததே இதுபோன்ற கொள்ளை சம்பவங்கள் மீண்டும் மீண்டும் அரங்கேறி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஸ்காட்லாந்து போலீசாருக்கு இணையாக சொல்லப்பட்ட தமிழக போலீசாரின் திறமைகளை எங்கே போய் ஓடி ஒளிந்தன என்று சமூக வலைதளங்களிலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இனியாவது இதுபோல கொலை, கொள்ளை சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் தகுந்த நடவடிக்கையை காவல்துறையினர் மேற்கொள்வார்களா என பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்…