சேலம்: ரூ.75 லட்சம் மோசடி புகாரின் பேரில்  தலைமறைவான முன்னாள் அதிமுக அமைச்சர் சரோஜா, நாமக்கல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த முன்ஜாமின்  வழக்கை வாபஸ் பேற்றார். சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட உள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆட்சி காலத்தில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த சரோஜா,  சத்துணவு பணியாளர் வேலை வாங்கி தருவதாக 18 பேரிடம் ரூ.75 லட்சம் பணம் வசூலித்ததாக குற்றம் சாட்டப்பட்டது.  இதுதொடர்பாக நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியை சேர்ந்தவர் குணசீலன் என்பவர் அளித்த புகாரின் பேரில், கைது செய்யப்படலாம் என அஞ்சிய சரோஜா தனது கணவருடன் தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த நிலையில், சரோஜா மற்றும் அவரது கணவரும் நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தனர். இந்த  மனு இரண்டு முறை விசாரணைக்கு வந்தபோது, சரோஜா தரப்பில் ஆஜரான வக்கீல், மனு மீதான விசாரணைக்கு வாய்தா கேட்டார். இதன் காரணமாக இந்த வழக்கின் விசாரணை இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டு வரும் 15ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில், தற்போது, தனது முன்ஜாமின் மனுவை சரோஜா வாபஸ் பெற்றுள்ளார்.

முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தை நாட உள்ளதால் நாமக்கல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை திரும்பப் பெற்றதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்து உள்ளார். இதையடுத்து,  ஓரிரு நாளில்  அவர் சார்பில் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் சரோஜா மனு தாக்கல் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.