சேலம்: அங்கன்வாடியில் வேலை வாங்கித் தருவதாக ரூ.75 லட்சம் மோசடி செய்த புகாரில் அதிமுக முன்னாள் சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா மீது நாமக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கடந்த அதிமுக ஆட்சியில் சமூக தலைவராக இருந்தவர் டாக்டர் சரோஜா. இவரது சொந்த ஊர் சேலம் மாவட்டம் சங்ககிரி. மருத்துவரான இவர் அதிமுக மாநில மகளிரணி இணை செயலாளராக இருந்து வருகிறார். இவரதுரு வீடு சங்ககிரி அருகே ராசிபுரம் பகுதியில் புதுப்பாளையம் சாலையில் உள்ளது. இவர் அமைச்சராக இருந்த போதே அவர்மீது ஏராளமான ஊழல் புகார்கள் கூறப்பட்டு வந்தன.
இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் சரோஜா மீது அவரது உறவினர் குணசீலன் என்பவர் ராசிபுரம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரில், சரோஜா, சத்துணவு திட்டத்தில் வேலை வாங்கி தருவதாக கூறியதைத் தொடர்ந்து, 15 பேர் தன்னிடம் ரூ.76.50 லட்சம் பணம் அளித்தனர். இந்த தொகையை முன்னாள் சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் சரோஜாவிடம் வழங்கினேன். ஆனால், அவர் வேலை வாங்கித் தராமல் மோசடி செய்துள்ளார். பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. இதுகுறித்து கேட்டால்மிரட்டுகின்றனர் என தெரிவித்துள்ளார்.
இந்த புகார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
ஏற்கனவே முன்னாள் அமைச்சர்கள் பலர் மீது ஊழல் புகார்கள் உள்ள நிலையில், முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர். விஜயபாஸ்கர், வேலுமணி, சி.விஜயபாஸ்கர், கே.வி.வீரமணி ஆகியோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், தற்போது 5வது நபராக முன்னாள் அமைச்சர் சரோஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.