திருச்சி
மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.71.75 லட்சம் மதிப்புள்ள தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.
மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், சார்ஜா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்குத் திருச்சி விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேற்கண்ட நாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வரும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.
கடத்தலைத் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தும் தங்கம் கடத்தல் சம்பவம் தொடர் கதையாக உள்ளது. துபாய் மற்றும் சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் விமானங்களில் அதிக அளவில் பயணிகள் தங்கத்தை கடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
நேற்று மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் திருச்சி விமான நிலையத்துக்கு வந்தது. வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் விமான பயணிகளைச் சோதனை செய்ததில் 2 பயணிகளின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது.
எனவே அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்ததில், ஆசனவாயில் தங்கத்தை மறைத்து வைத்துக் கடத்தி வந்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ரூ.71 லட்சத்து 72 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 188 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தங்கம் கடத்தி வந்த 2 பயணிகளிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.