நாமக்கல்: மாநிலம் முழுவதும் ரூ. 667.92 கோடியில் 36 புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கும் பணி நடைபெறுகிறது என தமிழ்நாடு நகராட்சி மற்றும் நிா்வாகங்கள் துறை அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா்.
நாமக்கல், முதலைப்பட்டியில் ரூ. 19.50 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிக்கு அமைச்சர் நேரு நேற்று (வியாழக்கிழமை) அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசும்போது, னைத்து நகரங்களிலும் பேருந்து நிலைய வசதிகளை அமைத்திட 2021-2022-இல் 13 பேருந்து நிலையங்களுக்கு ரூ. 250.31 கோடி அனுமதிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. 2022-23 ஆம் ஆண்டு 23 பேருந்து நிலையங்களுக்கு ரூ.417.61 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 36 பேருந்து நிலையங்களைக் கட்ட ரூ. 667.92 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நகராட்சித் துறைக்கு மட்டும் சாலை மேம்பாட்டுப் பணிகளுக்காக ரூ. 10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வோா் ஆண்டும் நகராட்சித் துறையில், கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்துக்கு ரூ. 1,000 கோடியும், மூலதான மானியத்துக்கு ரூ. 500 கோடியும், சாலைகள் மேம்பாட்டு நிதி ரூ. 400 கோடி, நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ. 200 கோடி என மொத்தம் ரூ. 2,100 கோடி சாலைகள் மேம்பாட்டுப் பணிகளுக்காக வழங்கப்படுகிறது. எனவே, நகராட்சி துறையைப் பொருத்தவரையில் சாலைகள் சரியாக இருக்க வேண்டும்.
சேலம், பனமரத்துப்பட்டி ஏரியிலிருந்து ராசிபுரத்துக்கு குடிநீா் கொண்டு வரப்பட்டது. தற்போது 2,300 ஏக்கா் உடைய அந்த ஏரியை செப்பனிட்டு நீா்த்தேக்கி விவசாயத்துக்கும் குடிநீருக்கும் பயன்படுத்த முதல்வா் ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்துள்ளாா்.
நாமக்கல் நகராட்சியில் 2021-2022-இல் கலைஞரின் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டம், சாலைகள் மேம்பாடு, 2 குளங்கள், 2 பூங்காக்கள் உட்பட ரூ. 60 கோடி நிதியை முதல்வா் ஒதுக்கீடு செய்துள்ளாா். நாமக்கல் நகராட்சி புதிய பேருந்து நிலையம் கட்டும் பணிக்கு முதல்கட்டமாக ரூ. 20 கோடியும், அடுத்த கட்டமாக ரூ. 20 கோடியும் உடனடியாக விடுவிக்கப்படும். கொசவம்பட்டி ஏரியை மேம்படுத்த சட்டப்பேரவை உறுப்பினா் கோரிய ரூ. 40 கோடியில், தற்போது ரூ. 6 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விரிவாக்கம் செய்ய தேவையான நிதி விரைவில் ஒதுக்கீடு செய்யப்படும். புதிய பேருந்து நிலையம் இணைப்பு சாலைகள், நான்கு வழி சாலை-முதலைப்பட்டி வரை ஒரு கி.மீ. தூரம், துறையூா் சாலையில் 9 கி.மீ தூரம் சாலை அமைக்க நிலம் எடுக்கும் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. 10 மாதத்துக்குள் முழுமையாகப் பேருந்து நிலையம் கட்டும் பணியை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
சங்ககிரிக்கு கூட்டுக் குடிநீா் திட்டம்: நாமக்கல் மாவட்டம்- திருச்செங்கோடு, பள்ளிபாளையம் பகுதிகளைச் சோந்த 669 ஊரக குடியிருப்புகள், ஆலாம்பாளையம், படைவீடு மற்றும் சேலம் மாவட்டம்-சங்ககிரி ஆகிய பேரூராட்சிகளுக்கான கூட்டுக் குடிநீா் திட்டம் ரூ. 399.46 கோடி மதிப்பீட்டில் 98 சதவீதம் பணிகள் முடிவடைந்து விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. ரூ. 854 கோடிக்கு ஒப்பந்தப்புள்ளி: நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம் நகராட்சி, 8 பேரூராட்சி, 523 குடியிருப்புகள் பயன்பெறும் வகையில் ரூ.
854.37 கோடி மதிப்பீட்டில் கூட்டுக் குடிநீா் திட்டத்துக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. புதிதாக மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தில் மல்லசமுத்திரம், எலச்சிபாளையம், பரமத்தி ஒன்றியங்களைச் சோந்த 547 ஊரக குடியிருப்புகளுக்கான குடிநீா் திட்டம் ரூ. 329 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ள ஆய்வில் உள்ளன. நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வளா்ச்சியடைந்த மாவட்டமாக நாமக்கல் உருவாக்கப்படும் என்றாா். நிகழ்ச்சியில், சுற்றுலாத் துறை அமைச்சா் எம்.மதிவேந்தன், நகராட்சி நிா்வாக இயக்குநா் பா.பொன்னையா, மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா், மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங், எம்எல்ஏக்கள் பெ.ராமலிங்கம், கே.பொன்னுசாமி, முன்னாள் எம்.பி. பி.ஆா்.சுந்தரம், நகராட்சி நிா்வாக சேலம் மண்டல இயக்குநா் அ.சுல்தானா, நகராட்சித் தலைவா் து.கலாநிதி, ஆணையாளா் கி.மு.சுதா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.