டெல்லி: மத்திய பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,362 கோடி ஒதுக்கீடு  செய்யப்பட்டு உள்ளதாக மத்திய ரயில்வே துறை  அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெமரிவித்துள்ளார்.

மத்திய பட்ஜெட்டில் தமிழக திட்டங்களுக்கு எதுவும் ஒதுக்கவில்லை என்றும், மத்திய அரசு கூட்டணி கட்சிகளின் மாநிலங்களுக்கு மட்டும் நிதி ஒதுக்கி உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட தமிழக அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இதையொட்டி, பட்ஜெட்டில் துறை வாரியாக ஒதுக்கப்பட்டுள்ள நிதிகள் அனைத்து மாநிலங்களுக்கும் சேர்ந்ததே என மத்திய நிதியமைச்சர் விளக்க்ம கொடுத்துள்ளார்.

இந்த நிலையில்,  தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,362 கோடி ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும், ஈரோடு – பழனி, மதுரை – தூத்துக்குடி புதிய ரயில் பாதை திட்டங்களுக்கு தலா ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என  மத்திய ரயில்வே துறை அமைச்சர்  அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய  ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ,  நடப்பு 2024-25-ஆம் ஆண்டு பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்காக ரூ.6,362 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2023-24-ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட ரூ.6,080 கோடியுடன் ஒப்பிடுகையில் அதிகமாகும்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் ஆண்டு சராசரியாக தமிழகத்துக்கு ரயில்வே திட்டங்களுக்காக ரூ.879 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதாவது ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் ஒதுக்கப்பட்டு வந்த நிதியைவிட ஏழு மடங்கு அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், தமிழகத்தில் ரூ.33,467 கோடி மதிப்பீட்டில் 22 ரயில்வே திட்டப் பணிகள் (புதிய ரயில் பாதைகள்) மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அம்ரித் ரயில் நிலையங்களாக 77 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் 687 ரயில்வே மேம்பாலங்கள், சுரங்கப் பாதைகள் கட்டப்பட்டுள்ளன. ரயில்வே திட்டப் பணிகளின் முன்னேற்றமானது நிலம் கிடைப்பதைச் சார்ந்திருக்கிறது.

நிலம் கையகப்படுத்தும் பணிகளை விரைவாக மேற்கொள்ளும் வகையில், மாநில அரசுகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறோம். திட்டங்களைச் செயல்படுத்துவதில் நிதிப் பற்றாக்குறை ஏதும் இல்லை. நிலம் கிடைக்கும்பட்சத்தில் திட்டப் பணிகளை வேகப்படுத்த முடியும் என்றார் அமைச்சர்.

பின்னர் செய்தியாளர்கள் தமிழக முதல்வரின் குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு  பதில் கூறிய அமைச்சர்,   “தமிழகத்தில் ரயில்வே திட்டங்களை முடிப்பதற்கும், முன்னெடுத்துச் செல்வதற்கும் தேவைப்படும் நிலம் 2,749 ஹெக்டேராகும். கிடைக்கக்கூடிய நிலம் 807 ஹெக்டேர் மட்டுமே. திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு மாநிலத்தின் ஆதரவு தேவைப்படுகிறது. நிதிப் பிரச்னை ஏதும் இல்லை. திட்டங்களை மேற்கொண்டு செயல்படுத்துவதில் இரு தரப்பும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

சில விவகாரங்களைப் பொருத்தவரை, குறிப்பாக ராமேசுவரம் – தனுஷ்கோடி இடையிலான ரயில்வே திட்ட விவகாரத்தில் தமிழக அரசிடமிருந்து எங்களுக்கு அலுவல்பூர்வ கடிதம் வந்துள்ளது. அதில், அந்தத் திட்டத்தைக் கைவிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது. நிலம் கிடைப்பதில் உள்ள பிரச்னை காரணமாக சில திட்டங்கள் தாமதமாகி வருகின்றன’ என்றார்.

மேலும் கூறுகையில், “ரயில் ஓட்டுநர்களின் வேலை நேரத்தை விதிகளின்படி ஒழுங்குபடுத்தவும், அவர்களின் நலன்களைப் பாதுகாக்கவும் ரயில்வே அமைச்சகம் உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ரயில்வே துறையில் 2004 முதல் 2019 வரையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் வேலைவாய்ப்பு 4.11 லட்சமாக இருந்தது. பிரதமர் மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியில் 5.02 லட்சம் வேலைவாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளன’ என்றார்.