சென்னை: தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு ரேஷன் அட்டைகளுக்கு தலா ரூ.1,000 வழங்கப்படும்  என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். அதே வேளையில், நெல்லை, தூத்துக்குடியில் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ₹6000 வழங்கப்படும் என கூறியுள்ளார்.

குமரிக்கடல் பகுதியில் ஏற்பட்ட வளிமண்டல சுழற்சி காரணமாக நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில்  பேய்மழை கொட்டியது. கடந்த 17ம் தேதி தொடங்கிய கனமழை தொடர்ந்து 15 மணி நேரம் கொட்டி தீர்த்தது. தொடர்ந்து 2 நாட்கள் பெய்த மழைக்கு, இதுவரை கண்டிராக அளவுக்கு இந்த மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின,  இதனால் நெல்லை, தென்காசி,  தூத்துக்குடி, குமரி உள்பட தென் மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. குறிப்பாக நெல்லை மாநகரத்தில் நெல்லை சந்திப்பு ரயில் நிலையம், நெல்லை ஆட்சியர் அலுவலகம், பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கியமான பல இடங்களை வெள்ள நீர் சூழ்ந்து. எங்கு பார்த்தாலும் வெள்ளம் தான் என்கிற நிலையில் அத்தியாவசிய பொருட்கள் கூட இல்லாமல் மக்கள் அவதிப்பட்டனர். மேலும் சாலைகளும் துண்டிக்கப்பட்தால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.  தற்போது மீட்புபணிகள்  நடைபெற்று வருகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்ப தொடங்கி உள்ளது.

இந்த நிலையில், வெள்ளப்பாதிப்புகளை ஆய்வு செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (டிசம்பர் 21ந்தேதி)  தூத்துக்குடி சென்றார்.   அங்கு மழை பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்ததுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.  அதிகனமழையால் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்ட திருநெல்வேலிக்கு நேரில் சென்று, முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களிடம் அவர்களுக்கு செய்து தரப்பட்டுள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்து, அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார்.

திருநெல்வேலி, நிவாரண உதவிகள் வழங்கிய நிகழ்வின் போது ஆட்டோ ஒட்டுநர் திரு.பாலசுப்பிரமணியம் அவர்களின் இரண்டாம் வகுப்பு பயிலும் மகள் செல்வி சேவிதா பகவதி தனது உண்டியல் சேமிப்பு பணத்தை நிவாரணப் பணிகளுக்காக வழங்கினார். அதைத்தொடர்ந்து நெல்லை, தென்காசி, குமரி மாவட்டங்களிலும் ஆய்வு மேற்கொள்கிறார்.

அதி கனமழையால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட திருநெல்வேலிக்கு நேரில் சென்று மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஆய்வு செய்த பிறகு, செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது, மழை நிவாரணம் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதன்படி, 150 ஆண்டுகளில் இல்லாத மழையால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீவைகுண்டம், ஏரல் உள்ளிட்ட பகுதிகளில் நிலைமை மிக மோசமாக உள்ளன என்றார். இதுவரை 12,000 பேர் மீட்கப்பட்டு முகாம்களில் பத்திரமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நெல்லை தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களை தமிழ்நாடு கண்டிப்பாக மீட்கும் என உறுதி அளித்தார்.

பிரதமரை மோடியை சந்தித்து அடுத்தடுத்து 2 பேரிடர்களில் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டிற்கு பேரிடர் மீட்பு நிதியிலிருந்து நிவாரணம் வழங்க கோரிக்கை வைத்துள்ளேன் என்றவர்,

* மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, நெல்லை மக்களுக்கு ரூ.6,000, தென்காசி மற்றும் குமரி மக்களுக்கு ரூ.1000 நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

* மழை, வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு, இழப்பீட்டுத் தொகையை ரூபாய் 4 இலட்சத்திலிருந்து, 5 இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

* சேதமடைந்த குடிசைகளுக்காக ஏற்கனவே வழங்கப்படும் தொகை ரூபாய் 5 ஆயிரத்தினை. ரூபாய் 10 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

* மழையினால் 33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாகப் பாதிக்கப்பட்ட நெற்பயிர் உள்ளிட்ட இறவைப் பாசனப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 13 ஆயிரத்து 500 ரூபாயிலிருந்து, 17 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

* பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்கள் 33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாகச் சேதமுற்றிருப்பின், இழப்பீடாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூபாய் 18 ஆயிரம் ரூபாயிலிருந்து, 22 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

* மழையினால் 33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாகப் பாதிக்கப்பட்ட மானாவாரிப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 7,410 ரூபாயிலிருந்து, 8,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

* 33,000 ரூபாயாக இருந்த எருது, பசு உள்ளிட்ட கால்நடைகளின் உயிரிழப்பு நிவாரணத்தை. 37,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

* 3,000 ரூபாயாக இருந்த வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழப்பு நிவாரணத்தை 4,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

* சேதமடைந்த படகுகள் மற்றும் வலைகளுக்கு நிவாரண உதவிகளைப் பொறுத்தவரையில், முழுமையாக சேதமடைந்த கட்டுமரங்களுக்கு (மீன்பிடி வலைகள் உட்பட), 32,000 ரூபாயிலிருந்து, 50 ஆயிரம் ரூபாயாகவும், பகுதியாக சேதமடைந்த கட்டுமரங்களுக்கு 10 ஆயிரம் ரூபாயிலிருந்து, 15 ஆயிரம் ரூபாயாகவும். முழுவதும் சேதமடைந்த வல்லம் வகை படகுகளுக்கு வழங்கப்படும் அதிகபட்ச மானியத் தொகை ரூபாய் 75 ஆயிரத்திலிருந்து, ஒரு இலட்சம் ரூபாயாகவும். முழுவதும் சேதமடைந்த இயந்திரப் படகுகளுக்கு வழங்கப்படும் அதிகபட்ச மானியத் தொகை ரூபாய் 5 இலட்சத்திலிருந்து. ரூபாய் 7 லட்சத்து 50 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்கிடவும். சேதமடைந்த வலைகளுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூபாய் 10 ஆயிரத்திலிருந்து, ரூபாய் 15 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

* அதி கனமழையின் காரணமாக, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மிகக் கடுமையாக வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள வட்டங்களில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக 6 ஆயிரம் ரூபாயாக வழங்கப்படும்  என கூறினார்.