டில்லி, 

வங்கிகளில் முதலீடு செய்யப்பட்ட கணக்கில் வராத பணத்திற்கு இதுவரை 6 ஆயிரம் கோடி ரூபாய் வரி வசூலாகியிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி கடந்த நவம்பர் 8 ம் தேதி உயர் பணமதிப்புநீக்க நடவடிக்கையை அமல்படுத்தினார்.

இதையடுத்து கருப்புப் பணம் வைத்திருக்கும் பலர் பினாமிகளின் பெயர்களில் பணமுதலீடு செய்ததால் பலரது வங்கிக் கணக்குகள் திடீரென உயர்ந்தது. இதனால் சந்தேகமடைந்த வருமானத்துறை அதிகாரிகள், டெபாசிட் காரர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அவர்கள் சரியான விளக்கம் தராதவர்களின் முதலீடுகளுக்கு 75 சதவித வரி செலுத்த பணித்தனர். இந்த வகையில் சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய் வசூலாகியிருப்பதாக இதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழுவின் துணைத் தலைவர் நீதிபதி அரிஜித்  பசாயட் தெரிவித்தார். ரூ 50 லட்சத்துக்கும் அதிகமான பணத்தை முதலீடு செய்த 1092 பேரிடமிருந்து இதுவரை எந்தப் பதிலும் வரவில்லை என்றும் சரியான விளக்கம் இல்லாத பணமுதலீடு செய்தவர்களிடமிருந்து விளக்கம் பெறுவது கடினமான செயலாகவும் அதிக நேரம் எடுப்பதாகவும் உள்ளது என்று அவர் கூறினார்.

பெருந்தொகை முதலீடு செய்திருக்கும் வணிகர்களிடம் கடந்த மூன்று ஆண்டுகளின் வரவுசெலவு கணக்குடன், வருமானவரிசெலுத்தியதற்கான ஆவணங்களையும் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டிருப்பதாக அரிஜித்  பசாயட் தெரிவித்தார்.