மாமல்லபுரத்தில் ரூ.60 கோடியில் புதிய பேருந்து நிலையம்! அமைச்சர் அன்பரசன் நேரில் ஆய்வு…

Must read

மாமல்லபுரம்:  மாமல்லபுரத்தில் ரூ.60 கோடி மதிப்பில் பல்வேறு அடிப்படை வசதிகளுடன் நவீன பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்து உள்ளார். அதற்கான இடத்தை அமைச்சர் ஆய்வு செய்தார்.

பழங்கால துறைமுகம் நகரமான மாமல்லபுரத்தில் ஏராளமான பல்லவர் கால சிலைகளும் உள்ளன. தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலாத்தலங்களில் மாமல்லபுரமும் ஒன்று. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சீன அதிபர், பிரதமர் மோடியுடன் சந்திப்பு நடைபெற்ற இடமும் மாமல்லபுரம். தற்போது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளும் நடைபெற உள்ளது. உலக புகழ்பெற்ற மாமல்லபுரத்தில், நவீன பேருந்து நிலையத்தை அமைக்க திமுக அரசு முடிவு செய்துள்ளது.

மாமல்லபுரத்துக்கு தினசரி தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநிலம், உள்ளூர் வெளிநாட்டிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வதால், அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது.  அதனால், நகருக்கு வெளியே ஈசிஆர் சாலையையொட்டி புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து , மாமல்லபுரம் நகருக்கு வெளியே பேருந்து நிலையம் அமைப்பதற்கான நிலம் தேர்வு செய்யப்பட்டு பூர்வாங்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதையடுத்து, புதிய பேருந்து நிலையத்துக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், திட்டப்பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், மாமல்லபுரத்தில் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன்பேரில், பேருந்து நிலையம் அமைய உள்ள இடத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வணிக வளாகம், பயணியர் விடுதி,  உணவகம், தொல்லியல் துறைக்கு சொந்தமான இடத்தில் பூங்கா, கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளுடன் ரூ.60 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது என்றார். மேலும்,  பயணியர் வாகன நிறுத்துமிடம், புல்வெளி போன்ற வசதிகளுடன், 60 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட உள்ளது.இரண்டு மாதங்களில் ஒப்பந்தம் இறுதி செய்து, பணிகள் துவக்கப்படும் என்று கூறினார்.

இந்த நிகழ்வின்போது,  காஞ்சிபுரம் தி.மு.க., – எம்.பி., செல்வம், திருப்போரூர் வி.சி., – எம்.எல்.ஏ., பாலாஜி, பேரூராட்சித் தலைவி வளர்மதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

More articles

Latest article