வேலூர்: வேலூரில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 12 பேரிடம் ரூ.57 லட்சம் மோசடி செய்த அதிமுக பிரமுகரை போலிசார் கைது செய்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுக ஜெயலலிதா பேரவையில் இணை செயலாளராக பொறுப்பு வகித்து வருபவர் சுகுமார். இவர் வேலூர் காகிதப்பட்டறை விநாயகர் கோவில் தெருவில் வசித்து வருகிறார். இவர் கடந்த அதிமுக ஆட்சியின்போது, பலரிடம் வேலை வாங்கி தருவாக பணம் வாங்கி மோசடி செய்ததாக புகார் எழுந்தது.  ஆனால், அவர் கூறியபடி வேலை வாங்கித்தரவில்லை என்பதால், அவர் மீது, வேலூர் ரங்காபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த சக்திவேலன் எனப்வர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

அவரது மனுவில், தனது  மனைவி ரேவதியிடம், சுகுமார் கடந்த அதிமுக ஆட்சியின்போது அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ‌.8.25 லட்சம் பணம் பெற்றுள்ளார். ஆனால் உறுதி அளித்தபடி சுகுமார் வேலை வாங்கித் தரவில்லை. அதனால் பணத்தை திருப்பி கேட்டபோது தர மறுப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த புகாரின் பேரில் வேலூர் மாவட்ட எஸ்பி ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில் புகாரின் மீது வழக்குப்பதிவு செய்து, மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி பூபதி ராஜன், காவல் ஆய்வாளர் கவிதா ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில்,  அதிமுக பிரமுகர் சுகுமார், அரசு வேலை வாங்கி தருவதாக கூறி கவிதா உள்ளிட்ட 12 பேரிடம் ரூ.57 லட்சம் ரூபாய் பணம் பெற்று கொண்டு, வேலை வாங்கி தராமல் மோசடி செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, சுகுமாரை கைது செய்தனர். தொடர்ந்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த விவகாரம் வேலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.