சென்னை: அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் கோவில்களில் மொட்டை போடும் பணியாளர்களுக்கு மாதம் ரூ.5000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையின் செப்டம்பர் 4ந்தேதி நடைபெற்ற அறநிலையத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்களைத் தொடர்ந்து, அமைச்சர் பி.கே.சேகர்பாபு, துறை சார்ந்த புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது, மொட்டை இலவசம், 3வேளை உணவு, அறநிலையத்துறை சார்பில் 10 கல்லூரிகள் உள்பட 112 அறிவிப்புகளை வெளியிட்டார்.
தமிழகஅரசின் இந்த அறிவிப்புகளுக்கு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில், கோவில்களில் மொட்டையடிக்கும் ஊழியர்களுக்கான ஊக்கத்தொகை இன்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
சட்டப்பேரவையில் இன்றைய கேள்வி நேரத்தின்போது, பேசிய அமைச்சர் சேகர்பாபு, தமிழகத்தில் அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களில் மொட்டை அடிக்கும் ஊழியர்களுக்கு மாதம் ரூ.5000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும், இந்த அறிவிப்பால் இந்து சமய அறநிலையத்துறை கோயில் ஊழியர்கள் 1,749 பேர் பயனடைவார்கள் என்றும் கூறியுள்ளார்.