நெல்லை: 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு தலா ரூ.5000 நிதி உதவி வழங்கப்படும் என  தமிழக முதல்வர்  எடப்பாடி பழனிச்சாமி திருநெல்வேலியில் அறிவித்தார்.

2 நாள் அரசுமுறை  பயணமாக தென் மாவட்டங்களுக்கு சென்றுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,  இன்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு நடத்தினார். தொடர்ந்து,    திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ரூ.208.30 கோடியில் 8 புதிய திட்டப்பணி களுக்கு தமிழக  முதல்வர்  எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

2,800 பயனாளிகளுக்கு ரூ.20 கோடி மதிப்பில் நலத்திட்ட  உதவிகளை முதல்வர் வழங்கினார். மேலும் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் முடிவுற்ற ரூ.32.30 கோடி  மதிப்பிலான 20 திட்டப் பணிகளை  முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தவர்,  கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும் என்றார். தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுப்பாட்டிற்குள் வந்தவுடன் பொதுப் போக்குவரத்து தொடங்கப்படும் என்றும், தற்போதைய நிலையில்,  இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய தற்போது வாய்ப்பில்லை. இ-பாஸ் முறையை எளிமையாக்குவது குறித்து ஆலோசித்து வருகிறோம் என்றார்.

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு தலா ரூ.5,000 வழங்கப்படும் என்றும். அவசர கால மருத்துவ பணியாளர்களுக்கும் தலா ரூ. 5,000 நிவாரண உத்தரவு வழங்கப்படும் என்று அறிவித்தார். 

தமிழகத்தில், பயிர் காப்பீட்டு திட்டத்தின் .கீழ் விவசாயிகளுக்கு ரூ.8,000 கோடிக்கு மேல் கடன் வழங்கப்பட்டுள்ளது.

நெல்லையை ஸ்மார்ட் சிட்டியாக மாற்ற ரூ.1000 கோடியில் திட்டம் பணிகள் நடைபெற்று வருகிறது. ராதாபுரம் கால்வாய் திட்டத்திற்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது. இம்மாத இறுதிக்குள் குடிமராத்துப் பணிகள் நிறைவடையும்.

இவ்வாறு அவர் கூறினார்.