சென்னை:
கொரோனா தாக்கத்தால் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை மற்றும் கட்டுமான பொருட்களின் விலையேற்றம் போன்றவற்றால் சென்னையில் மட்டும் 5000 கோடி ரூபாய் மதிப்பிலான வீடுகள் விற்பனையாகாமல் உள்ளன.

கொரோனா முதல் அலையின் போது வெளிமாநில தொழிலாளர்கள் பெருமளவில் சொந்த மாநிலங்களுக்கு திரும்பியதால் கட்டுமான துறை கடந்த வருடம் அக்டோபர் வரை முடங்கியது.

வீட்டுக்கடன்களுக்கான வட்டி குறைப்பு, தனி வீடுகள் மீதான மக்களின் ஆர்வம் காரணமாக இந்த ஆண்டு கட்டுமானத்துறை எழுச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் 2வது அலை ஏற்படுத்திய தாக்கமும், கட்டுமான பொருட்களின் திடீர் விலையேற்றமும் கட்டுமான நிறுவனங்களுக்கு பெருத்த இழப்பை ஏற்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுமான பொருட்கள் விலை உயர்வு காரணமாக ஒரு சதுர அடிக்கான விலை 250 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. இதனால் சென்னையில் மட்டும் 5000 கோடி மதிப்பிலான வீடுகள் விற்பனையாகாமல் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

கட்டுமான நிறுவனங்கள் சந்தித்து வரும் இழப்புகளால் இந்த துறையில் பணியாற்றும் லட்சக்கணக்கான பொறியாளர்களும், தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.