சென்னை: சென்னை ஆலந்தூர் அருகே ரூ.500 கோடி மதிப்புள்ள  அரசு நிலம் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டு உள்ளதாக வருவாய்த்துறை தெரிவித்து உள்ளது.

தமிழ்நாட்டில் முக்கிய பகுதிகளில் உள்ள அரசு நிலங்கள், கோவில் நிலங்கள் தனியார்களால் ஆக்கிரமிக்கப்பட்டும், போலி பட்டாக்கள் மூலம் விற்பனை செய்து வருவதும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, அரசு மற்றும் கோவில் நிலங்களை கண்டறித்து, மீட்கப்படும் நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில்,  சென்னை ஆலந்தூர் அருகே பட் ரோட்டில்  சுமார் ரூ.500 கோடி மதிப்பிலான 1,5 ஏக்கர்  அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருந்து தெரிய வந்தது. இதையடுத்து, அதை  ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கும் நடவடிக்கை தமிழ்நாடு பதிவுத்துறை மற்றும் வருவாய்த்துறை மேற்கொண்டது. போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை ஆக்கிரமித்து வீடுகளை கட்டியதாக கூறப்பட்டது. மேலும், ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில், பலர் வீடுகள் கட்டி இருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவர்கள் அங்கிருந்து காலி செய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து,  ஆக்கிரமித்து சிலர் வீடு கட்டி பயன்படுத்தி வந்த சுமார் 1.5 ஏக்கர் நிலத்தை, பல்லாவரம் வட்டாட்சியர்  மீட்டு நடவடிக்கை எடுத்துள்ளார்.  ஆக்கிரமிப்பில் இருந்தவர்கள் அப்புறப்படுத்தப்பட்டு வீடுகளுக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு நிலம் மீட்கப்பட்டது.