சென்னை:
தமிழகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக வந்த புகார்களை தொடர்ந்து, பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வை ரத்து செய்வதாக தமிழ்நாடு அரசு தேர்வு வாரியம் அறிவித்தது.
இந்நிலையில் இந்த முறைகேடு தொடர்பாக தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரிதெரிவித்து உள்ளார். மேலும், இந்த முறைகேடுகள் வாயிலாக ரூ.50 கோடி வரை சம்பாதித்துள்ளனர் என்றும் தெரிவித்தார்.
தமிழகத்தில் அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் காலிப்பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் எழுத்துத்தேர்வு நடத்தியது.
அந்த தேர்வை எழுத ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 366 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில்,1லட்சத்து 33 ஆயிரத்து 566 பேர் மட்டுமே தேர்வு எழுதினார்கள். அதைத்தொடர்ந்து கடந்த நவம்பர் 7ந்தேதி தேர்வு முடிவுகள் வெளியானது.
இதில் முறைகேடுகள் நடைபெற்றதாக கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து தேவை ரத்து செய்வதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறித்தது.
இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது தேர்வு எழுதிய வர்களில் 196 பேரின் மதிப்பெண்கள் திருத்தப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதற்காக ஒவ்வொருவரிடமும்
196 பேரிடமும் தலா ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை பெற்றுக் கொண்டு மதிப்பெண்கள் திருத்தப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் இந்த முறைகேட்டில் டில்லி நிறுவனத்தை சேர்ந்த சிலர், மின்வாரிய ஊழியர்கள், கல்வித்துறையைச் சேர்ந்தவர்கள் என பல்வேறு தரப்பினருக்கும் தொடர்பு இருப்பது தெரிந்தது. அவர்களை ஒவ்வொருவராக மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து விசாணை நடத்தி வரும் போலீஸ் துணை சூப்பிரண்டு செந்தில்குமார் கூறும்போது, கடந்த 4 மாதமாக நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து, ஒரு தலைமை ஆசிரியர், தொடக்கக்கல்வி துறை இளநிலை உதவியாளர், டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள கேண்டீன் உரிமையாளர், கால்டாக்சி டிரைவர் உள்பட 15 பேர் பிடிபட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், இவர்களில் 4 பேர் டில்லியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர்கள். இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சுப்பிரமணி என்பவர் தலைமறைவாகி விட்டார். அவரை தேடி வருவதாகவும் கூறினார்.
கைது செய்யப்பட்டவர்களில் 5 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறியவர், இந்த முறைகேட்டில் தரகர்களாக செயல்பட்ட பலரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளதாக தெரிவித்தார்.
மேரும், இந்த முறைகேடுகளை செய்தவர்கள், இதுவரை சுமார் ரூ.50 கோடி வரை சம்பாதித்து இருப்பார்கள் என்றும் கூறினார்.