ஐதராபாத்:

பணமதிப்பிழப்பால் திருப்பதி ஏழுமலையானும் பாதிக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

புழக்கத்தில் இருந்த ரூ. 500, ரூ. 1000 நோட்டுக்கள் செல்லாது என்று 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் பிரதமர் மோடி அறிவித்தார். இதனால் நாடு முழுவதும் மக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாயினர்.

இந்த வகையில் ஆந்திரா மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலிலும் வருவாய் பாதித்துள்து. பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ள நிர்ணயம் செய்யப்பட்ட காலக்கெடுவிற்கு பின் உண்டியல்களில் இத்தகைய செல்லாத நோட்டுக்கள் காணிக்கையாக செலுத்துவதை தடுக்கும் நடவடிக்கையில் திருப்பதி தேவஸ்தான போர்டு ஈடுபட்டது.

இதற்கு முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில் ரூ. 50 கோடி வரை பக்தர்கள் காணிக்கை செலுத்தியது குறைந்துள்ளது. 2017ம் ஆண்டில் மொத்தம் 995.89 கோடி மட்டுமே வசூலாகியுள்ளது. 2016ம் ஆண்டில் ரூ.1,046.28 கோடி வசூலானது. ரூ.50.39 கோடி குறைவாக 2017ம் ஆண்டில் வசூலானது.

2017ம் ஆண்டில் ரூ. 26 கோடி மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுக்கள் உண்டியலில் செலுத்தப்பட்டிருந்தது. இதில் பெரும்பாலான தொகை வங்கியில் செலுத்துவதற்கான கால அவகாசம் முடிந்த பிறகு உண்டியலில் இருந்து கிடைத்தது.

அதே சமயம் 2017ம் ஆண்டில் பக்தர்களின் வருகை 7 லட்சம் வரை உயர்ந்துள்ளது. 2016ம் ஆண்டில் 2.60 கோடி பேர் வருகை புரிந்துள்ளனர்.