சென்னை: முதல்வர் படைப்பகம் போல வடசென்னையில்  ரூ.50 கோடியில் 10 நூலகங்களை மேம்படுத்த அரசு திட்டம் தீட்டி உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து உள்ளார்.

 முதலமைச்சர் ஸ்டாலின்  சமீபத்தில், அவரது தொகுதியான கொளத்தூரில்  முதல்வர் படைப்பகம் என புதிய கட்டிடத்தை திறந்த வைத்தார். அதில்,  பணியிட மையம், கல்வி மையம் மற்றும் நூலகம் அமைந்துள்ளது. இதுபோல,  வடசென்னையில் ரூ.50 கோடியில் 10 நூலகங்களை மேம்படுத்தி, பகிர்ந்த பணியிட மையம் மற்றும் கல்வி மையம் அமைக்கவுள்ளதாக அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.

சென்னை திரு.வி.க.நகர், எழும்பூர், துறைமுகம், ராயபுரம், ஆர்.கே. நகர் மற்றும் பெரம்பூர் பகுதிகளில் உள்ள முழுநேரம் மற்றும் பகுதிநேர கிளை நூலகங்களை வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) சார்பில் மேம்படுத்தி, பகிர்ந்த பணியிட மையம் மற்றும் கல்வி மையம் அமைக்கப்படவுள்ளது.

இதுகுறித்து நேரில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சேகர்பாபு,  வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீ்ழ், ரூ.5,776 கோடியில் 225 திட்டங்கள் 11 துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் சிஎம்டிஏ பங்களிப்பாக ரூ.1,613 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், சிஎம்டிஏ சார்பில் 28 பணிகள் எடுக்கப்பட்டு 25 பணிகள் நடைபெற்று வருகின்றன.

கொளத்தூர் தொகுதியில் முதல்வர் படைப்பகம் என்ற திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து, சென்னைக்கு உட்பட்ட 10 இடங்களில் உள்ள நூலகங்களை ரூ.20 கோடியில் மேம்படுத்தவும், அப்பகுதிகளில் ரூ.30 கோடியி்ல் பகிர்ந்த பணியிட மையம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. வடசென்னையில் திருவிக நகர், எழும்பூர், துறைமுகம், ராயபுரம், ஆர்.கே.நகர் மற்றும் பெரம்பூரில் இத்திட்டத்தை விரிவுபடுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில் நூலகங்களுக்கு தேவையான அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்தி தரவும், 50 ஆண்டுகளுக்கு மேலான நிலையில் வசதி குறைவான நூலகங்களை இடித்துவிட்டு, புதிதாக நூலகங்களை கட்டவும் திட்டமிட்டுள்ளோம்.

உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டுவருவது, புதிய கட்டிடம் கட்டப்பட வேண்டியது என்று இரு பிரிவாக பிரித்து பணிகளை வரும் பிப்ரவரிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம். மேலும், ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம் என்று அனைத்து நூலகங்களையும் அடுத்தாண்டு டிசம்பருக்குள் கட்டி முடிக்கப்படவுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது மேயர் ஆர்.பிரியா, சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் கூறியவர், திராவிட மாடல் தி.மு.க., அரசு வசைப்பாடுபவர்களைப் பற்றி எந்த கவலையும் கொள்வதில்லை. வசை பாடுவோரும் வாழ்த்தும் அளவிற்கு எங்களுடைய மக்கள் பணி இருக்கும். இப்படித்தான் எங்களை முதல்வர் பணியாற்றச் சொல்லி இருக்கிறார்.

‘அரசுப் பணி மற்றும் கட்சி விழாக்களுக்காக துணை முதல்வர் உதயநிதி தஞ்சாவூருக்கு செல்கிறார். அவரை வரவேற்க, கோவில் பணம் செலவிடப்படுவதாக பா.ஜ., தலைவர் ராஜா குற்றஞ்சாட்டி உள்ளார். அவர், காலை எழுந்தது முதல் இரவு வரை, தி.மு.க., மற்றும் அதன் தலைவர்கள் மீது பொல்லாங்கு பேசுவதையே வாடிக்கையாக்கி இருக்கிறார். அவர் குற்றம் சுமத்திவிட்டார்; சொன்னதை அவர் நிரூபிக்க வேண்டும். அவர் சொல்வது போல, எங்கேணும் நடந்திருந்து, அதற்கான ஆதாரத்தைக் காட்டினால், சம்பந்தப்பட்ட வர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தயாராகவே இருக்கிறோம்.

தி.மு.க., அரசு மீது குறை சொல்ல எதுவும் இல்லை என்பதால், இப்படியெல்லாம் இல்லாததை சொல்கின்றனர். பொய்யைக் கூட உண்மை போல பேசக்கூடியவர் தான் ராஜா. அதனால் தான், தமிழக பா.ஜ., ஒருங்கிணைப்புக் குழு தலைவராக அவரை நியமித்துள்ளனர்.

தெலுங்கர்கள் குறித்து கொச்சையாகப் பேசி விமர்சித்தார் என, நடிகை கஸ்துாரி மீது குற்றச்சாட்டு உள்ளது. யார் என்ன கருத்தை சொல்கின்றனர் என்பதை விட, கருத்தை சொல்லும் நபர் யார் என்று பார்க்க வேண்டும்.

பெருமழை பெய்தால், எப்படி குப்பை அடித்துச் செல்லப்படுமோ, அதைப் போல கஸ்துாரி போன்றவர்களெல்லாம் அரசியல் பெரு மழையில் அடித்துச் செல்லப்படுவர். அவர் குறித்தெல்லாம் பேசி, பொன்னான நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.

இவ்வாறு சேகர்பாபு கூறினார்.