விழுப்புரம்: தமிழகத்தையே உலுக்கிய விழுப்புரம் சிறுமியின் குடும்பத்துக்கு தமிழக அரசு சார்பில் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 5 லட்சம் வழங்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த ஜெயபால் மகள் ஜெயஸ்ரீ தீ வைத்து கொல்லப்பட்டார். குடும்ப முன்பகை காரணமாக நிகழ்ந்துள்ள இச்சம்பவம் தமிழகத்தையே அதிரச் செய்துள்ளது.
இந்த சம்பவத்துக்கு திமுக தலைவர் ஸ்டாலின், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த சிறுமி ஜெயஸ்ரீயின் குடும்பத்திற்கு, முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாய் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு இருந்தார்.
இந் நிலையில், விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் அவரது பெற்றோரிடம் சட்டத் துறை அமைச்சர் சி.வி சண்முகம் 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். அப்போது மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் இரா.குமரகுரு மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.