சென்னை
சென்னையில் மயிலை கபாலி கோவிலுக்குச் சொந்தமான ரூ.5 கோடி மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டுள்ளது.
சென்னையில் மயிலாப்பூரில் அமைந்துள்ள கபாலி கோவிலுக்குச் சொந்தமான நிலங்களில் 2166 சதுர அடி நிலம் ஒன்று வெகு நாட்களாக குத்தகைக்கு விடப்பட்டிருந்தது. இந்த நிலம் பிச்சு பிள்ளை தெருவில் அமைந்துள்ளது. இந்த நிலத்தை ஒரு குடும்பத்தினர் பழைய பொருட்களை போட்டு வைக்கக் குத்தகைக்கு எடுத்துள்ளனர்.
ஆனால் அவர்கள் இந்த நிலத்தை வேறு சிலருக்கு வாடகைக்கு விட்டதுடன் அதை காலி செய்யாமல் இருந்துள்ளனர். கடந்த 2012 ஆம் ஆண்டு இந்த குத்தகைதரரின் மகன் நீதிமன்றத்துக்கு சென்று நிலத்தைத் திருப்பி கொடுக்க தடை உத்தரவு வாங்கினார். இது போலப் பல தடைகளுக்குப் பிறகு நீதிமன்றம் இந்த நிலத்தை ஆலய நிர்வாகத்திடம் திருப்பி அளிக்கச் சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது.
இந்த தீர்ப்பின் அடிப்படையில் தற்போது இந்த நிலம் மீட்கப்பட்டுள்ளது. இந்த நிலத்தின் மதிப்பு ரூ.5 கோடி ஆகும். தற்போது ஆலய மேம்பாட்டு பணிகளுக்காக இந்து அறநிலையத்துறை திட்டம் திட்டி உள்ளது. இந்த நிலத்தையும் அந்த திட்டத்தில் இணைக்க உள்ளதாக இந்து அறநிலையத்துறை அறிவித்துள்ளது