சென்னை: நாளை கும்பாபிஷேகம் நடைபெறும் மருதமலை முருகன் கோவிலில் ரூ.4லட்சம் மதிப்புள்ள வெள்ளிவேல் திருட்டு போயுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சாமியார் வேடத்தில் வந்த ஒருவர், அந்த வெள்ளி வேலை திருடிச்செல்லும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகி உள்ளது. இது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பிரசித்தி பெற்ற  மருதமலை சுப்பிரமணியசாமி கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி, கோவில் வளாகத்தில்,  யாக பூஜைகளுக்காக  73 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு  யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. ‘ இன்று (ஏப்ரல்  3-ந் தேதி)  காலை 4-ம் கால யாகவேள்வி நடைபெற்ற நிலையில், இன்று மாலை 5-ம் கால யாகவேள்வி நடைபெற உள்ளது.

இதைத்தொடர்ந்து நாளை (ஏப்ரல் 4-ந் தேதி ) கும்பாபிசேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி, நாளை  காலை 4.30 மணிக்கு ஆறுமுகனுக்கு 6-ம் கால யாகவேள்வி உள்ளிட்டவை நடைபெற உளள்ளது. அதையடுத்து,    காலை 6 மணி முதல் 6.45 மணிக்குள் பரிவார மூர்த்திகளுக்கு திருக்குட நன்னீராட்டு  (கும்பாபிசேகம்) பெருவிழா நடைபெற உள்ளது.  காலை 8.30 மணிக்கு மருதாசல மூர்த்தி விமானம், ஆதிமூலவர் விமானம், ராஜகோபுரம், கொடிமரம், பரிவார விமானங்கள் அனைத்துக்கும் சமகால திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடைபெறுகிறது.

கும்பபிசேகத்தையொட்டி, கோவில் வளாகம் மற்றும் அந்த பகுதியில் பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இந்த நிலையில்,  பக்தரின் போர்வையில், காவி உடை அணிந்து வந்த ஒருவர்,  முருகன் கோவிலுக்கு சொந்தமான வெள்ளி வேலை திருடிச் சென்றுள்ளார். இது பக்தர்களிடையே பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த ஏராளமான காவல்துறையினர் உள்பட கோவில் ஊழியர்களும் பணியில் இருக்கும் நிலையில், சாமியார் வேடத்தில் வந்த ஒருவர் சுமார் 4 லட்சம் மதிப்பிலான வெள்ளி வேலை திருடிச் சென்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் திருடனை தேடி வருகின்றனர்.