சென்னை,
சென்னை மணலி அருகே குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.4 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி சேஷாசலம் அடர்ந்த வனப்பகுதியில் அதிக அளவில் செம்மரங்கள் உள்ளன. இந்த மரங்களுக்கு வெளிநாடுகளில் நல்ல கிராக்கி. அதன் காரணமாக அந்த மரங்களை வெட்டி கடத்தப்படுகின்றன.
இந்த கடத்தலுக்காக அதிக கூலி கொடுப்பதாக கூறி, தமிழக கூலி தொழிலாளிகளையே அங்குள்ள கடத்தல் கும்பல் பயன்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக ஏராளமான தமிழக தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு சிறைவாசனம் அனுபவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக ஆந்திர மற்றும் தமிழக வனத்துறையினர் இணைந்து கூட்டு நடவடிக்கை எடுத்து வந்தாலும் கடத்தல் என்பது சர்வசாதாரணமாக நடந்து வருகிறது.
இந்நிலையில், சென்னை மணலி அருகே உள்ள குடோன் ஒன்றில் திருப்பதி போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, அங்கு 15 டன் அளவிலான செம்மரக்கட்டைகள் இருந்தது தெரிய வந்தது.
அதை கைப்பற்றிய ஆந்திர போலீசார், செம்மரக்கட்டைகளை பதுக்கி வைத்திருந்த கார்த்திக், அப்துல்ரசாக், கண்ணன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.