சென்னை:  தேர்தல் சமயத்தில், தாம்பரம் அருகே நெல்லை எக்ஸ்பிரஸ்  ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனை மீண்டும் விசாரணைக்கு அழைக்க சிபிசிஐடி முடிவு செய்துள்ளது. அதற்காக அவருக்கு  மீண்டும் சம்மன் அனுப்ப பட இருப்பதாக கூறப்படகிறது.

18வது மக்களவைக்கான தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்த காலக்கட்டத்தில்,  ஏப்ரல் 6-ம் தேதி அன்று சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு  புறப்பட்ட நெல்லை  எக்ஸ்பிரஸ் ரயிலில்  தாம்பரம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் சோதனை யிட்டனர். அப்போது,   ரயிலில் பயணித்த 3 பேரிடம், கணக்கில் காட்டப்படாத ரூ.4 கோடி பணம் பிடிபட்டது.  விசாரணையில், அந்த பணம், நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் தேர்தல் செலவுக்காக  எடுத்துச் செல்லப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக 3 பேரை கைது செய்த   தாம்பரம் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். பின்னர், இந்த வழக்கு பின்னர் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து,  ரயிலில் பணத்துடன் பிடிபட்ட சதீஷ், அவரது சகோதரர் நவீன், ஸ்ரீவைகுண்டம் டிரைவர் பெருமாள் மற்றும் நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன், அவரிடம் பணியாற்றும் ஜெய்சங்கர், ஆசைத்தம்பி ஆகியோருக்கு சிபிசிஐடி போலீஸார் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து,  பணம் கை மாறியதாக கூறப்படும் தமிழக பாஜக வர்த்தக பிரிவு தலைவர் கோவர்தனுக்கு சொந்தமான சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள உணவகம், நீலாங்கரை பகுதியில் உள்ள அவரது வீடு உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடைபெற்றது. தொடர்ந்து,  கோவையில் உள்ள தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகரின் வீட்டுக்குச் சென்று, சிபிசிஐடி போலீஸார் கடந்த வாரம் விசாரணை நடத்தினர்.

இதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக நயினார் நாகேந்திரன், தமிழக பாஜக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகன், கோவர்தன், நயினார் நாகேந்திரனின் உதவியாளர் மணிகண்டன் ஆகிய 4 பேரும் கடந்த 31-ம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், தேர்தல் முடிவு வெளியான பின்னர் ஆஜராவதாக அவர்கள் தகவல் அனுப்பினர்.

இதற்கிடையில்,  சிபிசிஐடி சம்மனை ஏற்று கேசவ விநாயகன், எழும்பூரில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் நேற்று (ஜூன் 5ந்தேதி)  காலை ஆஜரானார்.  அவரிடம் சுமார் 5மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவர்  சிபிசிஐடி அலுவலகத்தில் இருந்து  வெளியே வந்தார்.

இதற்கிடையே, விசாரணைக்கு ஆஜராகாத நயினார் நாகேந்திரன் உட்பட 3 பேருக்கு மீண்டும் சம்மன் அனுப்ப சிபிசிஐடி போலீஸார் முடிவு செய்துள்ளனர். விரைவில் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.