சென்னை: தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், இதுவரை உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 32 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் 15 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுதெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் அதிகாரி சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மேற்கொண்டு வரும் பணிகள் குறித்து பேசியவர், தேர்தல் தொடர்பான புகார் ஏதேனும் இருந்தால் பொதுமக்கள் உடனடியாக “1950” தொலைபேசி எண் மூலம் தெரிவிக்கலாம் – மேலும், 180042521950 என்ற தொலைபேசி எண் மூலம் தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்களிடம் புகார் தெரிவிக்கலாம் என்று கூறினார்.
மேலும், தமிழகம் முழுவதும் கண்காணிப்பு பணியில், 150 பொது தேர்தல் பார்வையாளர்கள், 40 சிறப்பு காவல்துறை பார்வையாளர்கள், 118 தேர்தல் செலவின பார்வையாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டு வருவதாகவும், தமிழகத்தில் வாக்குசாவடி தேர்தல் பணியாளர்களாக 4 லட்சத்து 79 ஆயிரத்து 892 பேர் பணியில் ஈடுபடுவார்கள் என்றும் கூறினார்.
மேலுங்ம, வாக்கு பெட்டிகள் இருக்கும் அறையில் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்படும் – 24 மணி நேரமும் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்படும் என்றவர், தமிழகத்தில் இதுவரை உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 32 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் 15 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.