சென்னை:
பிரபல தமிழ் நடிகர் விஜய் நேற்று மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட நிலையில், பிகில் படம் வசூல் தொடர்பாக ஏஜிஎஸ், அன்பு செழியனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் ரூ.300 கோடி பெறுமானமுள்ள அசையா சொத்துக்கான ஆவணங்கள் கிடைத்திருப்பதாக வருமான வரித்துறை தெரிவித்து உள்ளது.
நடிகர் விஜய் நடித்த பிகில் படத்தை பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனமா ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படம் வெற்றிபெற்று, கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் ஈட்டிய நிலையில், வருமான வரி முறைகேடு செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
இதையடுத்து, நேற்று சென்னை உள்பட பல இடங்களில் ஏ.ஜி.எஸ் நிறுவன அலுவலகங்கள் மற்றும் அந்நிறு வனத்தினருக்குச் சொந்தமான வீடுகளில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அதுபோல, பிரபல திரைப்பட பைனான்சியர், அன்புச்செழியனுக்குச் சொந்தமான சென்னைமற்றும் மதுரை உள்ள இடங்களிலும் ரெய்டு நடைபெற்றது. அதேவேளையில் நடிகர் விஜய்-யின் வீடுகள் மற்றும் அவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான பிகில் உலகம் முழுதும் சுமார் 300 கோடி வரை வசூலித்ததாக தகவல்கள் வெளியானது. இதைத்தொடர்ந்து நடிகர் விஜயிடமும் பிகில் படத்திற்கு சம்பளம் வாங்கியது தொடர்பாக விசாரணை நடத்த படப்பிடிப்பிலிருந்து பாதியில் அழைத்துச் சென்றனர். இன்று வரையில் விஜயின் வீட்டில் வருமான வரிதுறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகர் விஜயிடம் இருந்து இதுவரை எந்தவொரு பணமும் பறிமுதல் செய்யப்படவில்லை. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த சோதனையில், தயாரிப்பாளர் மற்றும் பைனான்ஸியரின் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் ரகசிய இடங்களில் இருந்து மறைத்து வைக்கப்பட்டிருந்த 77 கோடி பணம் மற்றும் ஆவணங்கள், அடமானப் பத்திரங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொத்து ஆவணங்கள், பிராமிசிரி நோட்டு, காசோலைகள் மற்றும் முன்தேதியிட்ட காசோலைகள் மூலம் ரூ.300 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் தயாரித்த படங்களில் நடித்த நடிகர், நடிகைகளுக்கு அளிக்கப்பட்ட சம்பளம் தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து ஐடி அதிகாரிகள் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பிகில் பட விவகாரத்தில், சட்டத்துக்குப் புறம்பான வகையில், அன்புச்செழியனுக்கும் விஜய்க்கும் இடையில் பணப் பரிவர்த்தனை நடந்திருக்கலாம் என்று ஐடி அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். பிகில் திரைப்படத்திற்காக ஏஜிஎஸ் சினிமாஸ் அவருக்கு வழங்கிய ஊதியம் ஆகியவை குறித்து சினிமா பைனான்சியர் அன்புச்செழியனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிகில் படத்தின் விநியோகஸ்தருக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையிலும் பல ஆவணங்கள் அவரது நண்பர் வீட்டில் மறைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளது என்று வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
அரசியலுக்கு வருவாரா நடிகர் விஜய்… (செய்தியை காண கிளிக் செய்யுங்கள்)
நடிகர் விஜயின் சமீப கால படங்கள், மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக குரல் எழுப்பி வருவது அனைவரும் அறிந்ததே. ஏற்கனவே கடந்த 2017ம் ஆண்டு வெளியான மெர்சல் படத்தில், மோடி அரசு கொண்டு வந்த ஜிஎஸ்டி, ‘டிஜிட்டல் இந்தியா’ க்கு எதிராக பேசியதும், அதற்கு பாஜகவினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து போராட்டங் களும் நடத்தினர்.
அதுபோல, கடந்த ஆண்டு வெளியான விஜயின் சர்க்கார் படத்திலும் மாநில அரசின் இலவச திட்டங்களுக்கு எதிராக ஆவேசமாக பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.
கடந்த ஆண்டு வெளியான பிகில் திரைபடத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் யாரை எங்க உட்கார வைக்கணுமோ அவரை அங்க உட்கார வையுங்க என்று நடிகர் விஜய் பேசி பரபரபரப்பை ஏற்படுத்தினார்.
இநத நிலையில், நேற்று முதல் நடிகர் விஜய், ஏஜிஎஸ் சினிமா தயாரிப்பு நிறுவன்ம, பைனான்சியர் அன்புச்செழியனுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித் துறை அதிரடி சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.