டெல்லி:  ரூ.300 கோடி மதிப்பிலான சிலை கடத்தல் வழக்கு தொடர்பான கோப்புகள் மாயமானது எப்படி என கேள்வி எழுப்பி உள்ள உச்சநீதிமன்றம்,  தமிழக அரசின் செயல் அதிர்ச்சி அளிக்கிறது என  கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில், 300 கோடி ரூபாய் மதிப்பிலான சிலை கடத்தல் வழக்கு தொடர்பான கோப்புகள் மாயமான விவகாரத்தில், தமிழக உள்துறை செயலாளர் ஆஜராகி விளக்கம் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன்  என்பவர் வழக்கு தொடுத்திருந்தார். அவர் தாக்கல் செய்திருந்த மனுவில்,  சர்வதேச சிலை கடத்தல் கும்பல் தமிழகத்தில் உள்ள பாரம்பரியமிக்க, விலைமதிக்க முடியாத, புராதன சிலைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளது. இந்த சிலை கடத்தலில் அரசியல்வாதிகள், போலீஸ் உயர் அதிகாரிகள், அறநிலையத் துறை அதிகாரிகள் என பலருக்கும் தொடர்புள்ளது.

இந்த சிலை கடத்தல் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளில் தொடர்புடைய 41 கேஸ் டைரிகள் எனப்படும் விசாரணை ஆவணங்கள் மாயமாகி யுள்ளன. ‘சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனிலிருந்து இந்த ஆவணங்கள் திருடப்பட்டு உள்ளன. இதனால் அந்த வழக்குகள் கைவிடப் பட்டு குற்றம் சாட்டப்பட்டவர்களும் தண்டனையிலிருந்து தப்பியுள்ளனர்.

இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்’ என்றும், இதை விசாரிக்க பணியில் உள்ள அதிகாரியை நியமிக்காமல், உயர் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஒருவரை நியமித்து விசாரிக்க உத்தரவிட வேண்டும். அத்துடன் இந்த 41 வழக்கு ஆவணங்கள் மாயமாகி விட்டன என்ற அடிப்படையில் இதுதொடர்பான சிலை கடத்தல் வழக்குகளை முடித்து வைக்க தடை விதிக்க வேண்டும் எனவும்  கோரியிருந்தார்.

இந்த வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து. அப்போது வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் ஆஜராகி, குற்ற வழக்குகளின் விசாரணை ஆவணங்கள் மாயமாகி விட்டது எனக்கூறி வழக்கை முடித்து வைத்த போலீஸ் அதிகாரிகளின் பெயர் உள்ளிட்ட விவரங்களை வெளிப்படையாக வெளியிட வேண்டும் என்றும் அவர்கள் மீது குற்றவியல் ரீதியாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இதில் ரூ. 400 கோடி வரை மோசடி நடந்துள்ளது என்றும் வாதிட்டார்.

அதையடுத்து நீதிபதிகள், இதுதொடர்பாக தமிழக அரசு மற்றும் போலீஸ் டிஜிபி, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை  தள்ளி வைத்தனர்.

ஆனால், தமிழக அரசு உயர்நீதிமன்றத்தின் உத்தரவினை மதிக்கவில்லை. இதையடுத்து,  சென்னை உயர் நீதிமன்றம், சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதுடன், 41 சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பான திருடப்பட்ட கோப்புகளை உடனடியாக மீட்டு, இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என, தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

ஆனால், தமிழ்நாடு அரசு உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.  வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் உச்சநீதிமன்றத்தை நாடினார். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை, மாநில அரசு சரியாக பின்பற்றவில்லை எனக்கூறி, உச்ச நீதிமன்றத்தில் யானை ராஜேந்திரன் சார்பில், மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றல் நீதிபதிகள் அபய் எஸ் ஓஹா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்ததது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மணி, ”சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இரண்டு ஆண்டுகளாகியும், தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ”இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தற்போதும் போலீஸ் துறையில் உயர் பதவியில் உள்ளனர். கோப்புகள் திருடப்பட்டதில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை,” என, வாதங்களை முன் வைத்தார்.

அந்த வாதங்களை கேட்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் தமிழகஅரசு நடந்து கொண்ட விதம் தங்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருக்கிறது என்று கூறியதுடன்,  இவ்வளவு முக்கியமான ஒரு விவகாரத்தை, மாநில அரசு உரிய கவனம் செலுத்தி விசாரிக்கவில்லை என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக உள்துறை செயலர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்புவதாக தெரிவித்தனர்.

வழக்கு தொடர்பாக, தமிழக உள்துறை செயலர் தனிப்பட்ட முறையில், ஜனவரி, 27ம் தேதிக்குள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் ஜனவரி 31ல், அவர் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

அப்போது, தமிழகஅரசு வழக்கறிஞர், உள்துறை செயலர் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக ஆஜராக அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக ஆஜராக அனுமதி வழங்கி, வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தனர்.

..