ராமநாதபுரம்:  பசும்பொன் தேவர் ஜெயந்தி மற்றும் தேவர் குருபூஜையை முன்னிட்டு பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில்  மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்திய முதலமைச்சர் ஸ்டாலின், பசும்பொன்னில்  ரூ.3 கோடியில் முத்துராமலிங்கத் தேவர் பெயரில் திருமண மண்டபம் அமைக்கப்படும் என அறிவித்தார்.

 ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்த பசும்பொன் கிராமத்தில்  முத்துராமலிங்கத்தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118-ஆவது ஜெயந்தி விழா, 63-ஆவது குருபூஜை விழா கொண்டாடப்பட்டு வருகிறது. 3 நாட்கள் நடைபெறும் இந்த விழா  கடந்த 28-ஆம் தேதி  தொடங்கிய நிலையில், இன்று குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா நடைபெறுகிறது. இதையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில்,  இன்று காலை பசும்பொன் தேவர் நினைவிடத்தில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மரியாதை செலுத்தினார்.

இதற்கு பிறகு சுமார் 10 மணிக்கு மேல்,  பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து தி.மு.க. எம்.பி.க்கள், அமைச்சர்கள் மற்றும் சட்டசபை உறுப்பினர்கள் மரியாதை செலுத்தினர்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின்,   நாட்டின் விடுதலைக்காக தன்னையே ஒப்படைத்தவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்.  அறம் வளர்த்த பாண்டிய மன்னர்களின் இளவல் போன்று காட்சியளித்தவர் என அண்ணாவால் போற்றப்பட்டவர் முத்துராமலிங்கத் தேவர் என பெருமை பேசியதுடன்,   பசும்பொன்னில் முத்துராமலிங்கருக்கு மணிமண்டபம் அமைத்து புகழ் சேர்த்தவர் கலைஞர் என்பதை நினைவூட்டியதுடன், கடந்த 2007-ம் ஆண்டு முத்துராமலிங்கத் தேவரின் நூற்றாண்டு விழா கலைஞர் ஆட்சியில் கொண்டாடப்பட்டது என்றவர்,  பசும்பொன்னில் ரூ.3 கோடியில் முத்துராமலிங்கத் தேவர் பெயரில் திருமண மண்டபம் அமைக்கப்படும் என்றும் அறிவித்தார்.

இந்த மண்டபம், உள்ளூர் மக்களின் திருமணம் மற்றும் பொதுநிகழ்ச்சிகளுக்கு பயன்படும் வகையில் கட்டப்படும். இது தேவரின் பெயரைப் போற்றும் மற்றொரு சின்னமாக அமையும் என்று அவர் தெரிவித்தார்.

தேவரின் சமூக சீர்திருத்தங்களை தி.மு.க. தொடர்ந்து போற்றி வருவதை இந்த அறிவிப்பு வலியுறுத்துகிறது .முடிவாக, இந்த நிகழ்வு மற்றும் அறிவிப்பு, தேவரின் பாரம்பரியத்தை அரசு அளவில் கொண்டாடும் முயற்சியாக அமைந்துள்ளது. ரூ.3 கோடி திருமண மண்டபம், பசும்பொன் பகுதி மக்களுக்கு நீண்டகால பயனைத் தரும் என்று அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.