சென்னை: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது ரூ.280 கோடி ஊழல் புகார் குவிந்துள்ள நிலையில், அதுகுறித்து விசாரணை நடத்த நீதிபதி நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், சூரப்பா மீதான குற்றச்சாட்டுக்கள் தவறானவை, அவர் அப்பழுக்கற்றவர் என்று, கவர்னர் பன்வாரிலால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் எழுதி உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.
ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள ஒருவருக்காக, ஆளுரே வக்காலத்தி வாங்கியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தரான சூரப்பா விதியைமீறி அவரது மகள் உள்பட பலருக்கு பணி வழங்கியதாகவும், மேலும் பல பணி நியமனங்கள் முறைகேடாக நியமனம் செய்யப்பட்டதாகவும் புகார்கள் குவிந்துள்ளது. ரூ.280 கோடி அளவுக்கு அவர் ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
இதையடுத்து, சூரப்பா மீதான புகார்களை விசாரிக்க தமிழகஅரசு சார்பில், ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, சூரப்பா மீதான புகார்கள் குறித்து, பாதிக்கப்பட்டவர்கள் நேரடியாகவோ, கடிதம் மூலமோ, மின்னஞ்சல் மூலமோ புகார் கொடுக்கலாம் என விசாரணை ஆணைய நீதிபதி அறிவித்திருந்தார். அதைத்தொடர்ந்து ஏராளமான புகார்கள் குவிந்து வருவதாக நீதிபதி கலையரசன் தெரிவித்து உள்ளார். ஊழல் புகார் தொடர்பாக துணை வேந்தர் சூரப்பாவிடம் விரைவில் நேரில் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில், அவர்மீதான விசாரணைக்கு தடை விதிக்கக்கோரி நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கும் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், சூரப்பாவுக்கு ஆதரவாக ஆளுநர் பன்வாரிலால் தமிழக அரசுக்கு 5 பக்க கடிதம் எழுதியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் சூரப்பா அப்பழுக்கற்றவர் என்றும் துணைவேந்தர் பொறுப்பை அவர் நேர்மையாகவும் திறம்படவும் செயலாற்றி வருவதாகவும் ஆளுநர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.