மதுரை: ரூ.257 கோடி மதிப்பிலான கிரானைட் முறைகேடு வழக்கு தொடர்பாக முன்னாள் திமுக தென்மண்டல தலைவர் மு.க.அழகிரி மகன் துரை தயாநிதி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜரானார். இதையடுத்து வழக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
கடந்த 2006 முதல் 2011ம் ஆண்டுவரை நடைபெற்ற திமுக ஆட்சியின்போது, அப்போதைய மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி பிரதமர் மன்மோகன் தலைமையிலான காங்கிரஸ் அரசில் மத்தியஅமைச்சராக இருந்தார். அதுபோல திமுக தென்மண்டல செயலாளராகவும் இருந்து வந்தார். இந்த காலக்கட்டத்தில், முறைகேடாக வருமானத்துக்கு அதிகமான அளவு சொத்து குவித்துள்ளதாகவும், முறைகேடாக குவாரி தொழில் நடத்தியதாகவும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
2011-ம் ஆண்டுக்கு முன்பு மதுரை மாவட்டத்தில் கிரானைட் குவாரி உரிமம் பெற்றவர்கள் அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து கிரானைட் குவாரிகள் மூடப்பட்டு உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக உயர்நீதிமன்றம், சகாயம் ஐ.ஏ.எஸ் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது. ஆய்வுக்கு பின்னர், ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக 2013-ம் ஆண்டு அரசிடம் அறிக்கை சமர்பிக்கப்பட்டது. எனவே மதுரை மாவட்டத்தில் கிரானைட் குவாரிகள் செயல்பட தடை விதிக்கப்பட்டது.
இந்த கிராணைட் முறைகேடு தொடர்பாக, மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதியின் நிறுவனமான ஒலம்பஸ் கிரானைட் நிறுவனம் மீதும் சட்ட விரோதமாக கிரானைட் முறைகேட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்டுள்ள துரை தயாநிதி உள்ளிட்ட 14 பேர் மீது காவல்துறையினர் 5191 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை காவல்துறையினர் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஜூலை 27-ம் தேதி மேலூர் நீதிமன்றத்தில் துரை தயாநிதி உள்ளிட்டோர் ஆஜராகினர். அப்போது அவர்கள் குற்றப்பத்திரிகை நகலை பெற்றுக் கொண்ட பிறகு வழக்கு மதுரை மாவட்ட கனிமவள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு செப்டம்பர் 5-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது , துரை தயாநிதி உள்ளிட்ட 12 பேர் நேரில் ஆஜராகினர். இதனையடுத்து வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் நவம்பர் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.