சென்னை: தமிழ்நாடு அரசு தொடங்கி உள்ள “இல்லம் தேடி கல்வி” திட்டத்திற்கான சின்னம் வரையும் போட்டியை அறிவித்து உள்ளது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.25ஆயிரம் பரிசு வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
தமிழகத்தில் 1-8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கற்றல் குறைபாடைப் போக்க, அவர்களின் இல்லங்களுக்கே சென்று பாடம் நடத்தும் வகையில் “இல்லம் தேடிக் கல்வி” என்ற திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை தொடங்கி உள்ளது. இந்த திட்டத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் சென்னையில் தொடக்கி வைத்தார். இல்லம் தேடிக் கல்வி என்னும் திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்தத் அரசு திட்டமிடப்பட்டுள்ளது.
இதையொட்டி “இல்லம் தேடி கல்வி” திட்டத்திற்கான சின்னம் (logo with tagline) வரையும் போட்டியை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.25000 பரிசு வழங்கப்படும் என்றும், அதற்கான அவகாசம் 24-ஆம் தேதி வரைஎன்று மாநில பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
கொரோனா பரவல் சார்ந்த பொதுமுடக்கக் காலங்களில், பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியைக் குறைக்கும் வகையில் தமிழ்நாடு அரசு “இல்லம் தேடிக் கல்வி” என்னும் திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
இல்லம் தேடி கல்வி திட்டத்தின் முக்கிய நோக்கங்கள் :
கொரோனா பெருந்தொற்றுப் பரவல் சார்ந்த பொதுமுடக்கக் காலங்களில், அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள கற்றல் இழப்புகளைச் சரிசெய்தல்.
பள்ளி நேரத்தைத் தவிர, மாணவர்களின் வசிப்பிடம் அருகே, சிறிய குழுக்கள் மூலம் தன்னார்வலர்களின் பங்கேற்புடன் மாணவர்களுக்குக் கற்றல் வாய்ப்புகளை வழங்குதல்.
மாணவர்கள் பள்ளிச் சூழலின்கீழ் ஏற்கனவே பெற்றுள்ள கற்றல் திறன்களை “இல்லம் தேடிக் கல்வி” திட்டச் செயல்பாடுகளின் வாயிலாக மீண்டும் வலுப்படுத்துதல்.
இத்திட்டத்தினைச் செம்மையாகச் செயல்படுத்துவதன் மூலமே மாணவர்கள் வரும் கல்வியாண்டில் அடுத்த வகுப்புக்குச் செல்லும் பொழுது அவர்கள் அதற்கு முழுத் தகுதி படைத்தவர்களாக இருப்பார்கள்.
தன்னார்வலர்கள் தகுதி:
தன்னார்வலர்கள் 1-5ஆம் வகுப்பு மாணவர்களுக்குக் கற்பிக்க குறைந்தபட்சக் கல்வித் தகுதியாக 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.
அதைப்போலவே, 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்குக் கற்பிக்க குறைந்தபட்சக் கல்வித் தகுதியாக இளங்கலை பட்டப்படிப்பு (Any Degree) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என வரையறுக்கப்படுள்ளது
இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கான சின்னம் உருவாக்கும் போட்டி :
அரசு பள்ளி மாணவர்களின் கல்வி நலனுக்காக செயல்படுத்தப்பட உள்ள சிறப்பு திட்டத்தின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் அனைத்தையும் நகர், ஊரகப் பகுதி மக்களிடையே எளிதாக கொண்டு சேர்க்கும் வகையிலும் மற்றும் இத்திட்டத்தின் ஒட்டுமொத்த இலக்கை மிக எளிதாக மக்களுக்கு உணர்த்தவும் இத்திட்டத்திற்கான சின்னம் (logo with tagline) மக்கள் பங்கேற்புடன் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான சின்னம் (logo with tagline) உருவாக்கும் போட்டி 24-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் அனைத்து நகர் ஊரக பகுதிகளில் உள்ள பள்ளி கல்லூரி மாணவர்கள் பெண்கள் ஓய்வுபெற்ற ஊழியர்கள் ஆசிரியர்கள் பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் தனி நபராகவோ அல்லது குழுவாகவோ பங்கேற்கலாம், வயது வரம்பு ஏதுமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
போட்டியாளர்களால் தயாரித்து வழங்கப்படும் சின்னம் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி இயக்கத்தால் இறுதி செய்யப்படும். சிறந்த மற்றும் பொதுமக்களுக்கு எளிய வகையில் புரிந்திடும் வகையிலான சின்னத்தை உருவாக்கும் ஒரு வெற்றியாளருக்கு ரூபாய் 25 ஆயிரம் ரொக்கப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.
போட்டியாளர்கள் தங்களின் இறுதிப் படைப்பினை illamthedikalvi@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 24.10.2021 அன்று மாலை 5.00 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். போட்டியாளர்களால் தயாரித்து வழங்கப்படும் சின்னத்தை இறுதி பொறுப்பு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறையை சார்ந்ததாகும்.
மேலும், இத்திட்டத்திற்கென சேவையாற்ற விருப்பமுடைய 38 மாவட்டங்களிலுள்ள தன்னார்வலர்கள் அனைவரும் தங்கள் விவரங்களை illamthedikalvi.tnschools.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் 18ம் தேதி முதல் பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.