சென்னை: இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கான பாராட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகளுக்கு தலா ரூ. 25 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என்றும் என்று அறிவித்தார்.
“ஒளிரும் தமிழ்நாடு – மிளிரும் தமிழர்கள் ” என்ற பெயரில்,இந்திய விண்வெளி துறையில் சாதனை படைத்த விஞ்ஞானிகளுக்கு பாராட்டு விழாவில் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விஞ்ஞானிகளுக்கு சால்வை அணிவித்து, பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசுகளை வழங்கி சிறப்பித்தார். அப்போது, விண்வெளி திட்டங்களில் முத்திரை பதித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகளுக்கு தலா ₹25 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்தார்.
“ஒளிரும் தமிழ்நாடு – மிளிரும் தமிழர்கள் “ சாதனை படைத்த தமிழ்நாட்டு விண்வெளி விஞ்ஞானிகளுக்கான பாராட்டு விழா சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கில் இன்று நடைபெற்றது. இதில் விஞ்ஞானிகள் கே.சிவன், மயில்சாமி அண்ணாதுரை, வி.நாராயணன், ஏ.ராஜராஜன், எம்.சங்கரன், ஆசீர் பாக்கியராஜ், டாக்டர் எம்.வனிதா, டாக்டர் நிகார் ஷாஜி,டாக்டர் பழனிவேல் வீரமுத்து ஆகியோர் கலந்துகொண்டனர். இவர்கள் 9 பேரையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டினார்.
இந்த நிகழ்ச்சியில், மு.க.ஸ்டாலின், “தமிழ்நாட்டின் முதலமைச்சராக மட்டுமல்ல- தமிழனாகப் பிறந்த பெருமையை இன்றைய தினம் அதிகமாக அடைகிறேன். இந்தியாவின் பக்கமாக உலகத்தையே பார்க்க வைத்த தமிழ்நாட்டு அறிவியல் மேதைகள் ஒன்பது பேர் இந்த மேடையில் அமர்ந்திருப்பது எனது உள்ளத்தை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியிருக்கிறது.
சந்திராயன் – 3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது என்பதற்கு இணையாக – விண்வெளி ஆராய்ச்சியில் கொடி கட்டிப் பறக்கும் தமிழர்கள் என்ற செய்தி அதிகமாகப் பரவியது. இத்தகைய பெருமையை தமிழ்நாட்டுக்குத் தேடித்தந்த அறிவியல் மேதைகளான உங்கள் அனைவருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் என்ற முறையில் மட்டுமல்ல – கோடிக்கணக்கான தமிழ்நாட்டு மக்கள் சார்பில் வாழ்த்துகிறேன். பாராட்டுகிறேன். போற்றுகிறேன். உங்கள் அனைவரையும் வணங்குகிறேன்.
தமிழ் இனத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் என்ன பெருமை என்றால் சந்திராயன் – 1 திட்டத்தின் இயக்குநராக இருந்தவர் மயில்சாமி அண்ணாதுரை அவர்கள்.2008 அக்டோபர் 28 ஆம் நாள் அது நிலவைச் சுற்றத் தொடங்கியது.
நிலவில் நீர்க்குறுகள் இருப்பதை இதுவே கண்டறிந்து சொன்னது. சந்திராயன் – 2 ஆனது 2019 சூலை 15 ஆம் நாள் ஏவப்பட்டது. இதன் திட்ட இயக்குநராக வனிதா செயல்பட்டார். அந்தக் காலக்கட்டத்தில் இஸ்ரோ தலைவராக இருந்தவர் டாக்டர் சிவன் அவர்கள். இப்போது ஏவப்பட்டது சந்திராயன் – 3. இதன் திட்ட இயக்குநர் வீரமுத்துவேல். – இதுதான் தமிழ்நாட்டுக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை ஆகும்.
“இந்த நாட்டில் ஏன் ஐன்ஸ்டீன், தாமஸ் ஆல்வா எடிசன் உருவாகவில்லை என அப்போது கேட்டவர் அண்ணா. அதனால், அவர் பெயரிலான இந்த அரங்கில், விஞ்ஞானிகளான உங்களை அழைத்து பாராட்டுவதே சிறந்தது. இந்தியாவிற்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை ஏற்படுத்திக் கொடுத்த, இனியும் ஏற்படுத்திக் கொடுக்கப் போகின்ற விஞ்ஞானிகள் 9 பேருக்கும் அரசு சார்பில் தலா 25 லட்சம் வழங்கப்படும்.
உழைப்புக்கான அங்கீகாரமாக இதை ஏற்றுக்கொள்ள வேண்டும்; முதுநிலை பொறியியல் படிக்கும் அரசுப்பள்ளி மாணவர்களின் செலவையும் அரசே ஏற்கும். தமிழர்களின் வானியல் அறிவு தனித்துவமானது; விருப்பு, வெறுப்பற்ற வகையில் அறிவியலை பின்பற்றுபவர்கள் தமிழர்கள் வீரமுத்துவேல் உள்ளிட்ட தமிழர்கள் இஸ்ரோவில் கொடிகட்டிப் பறப்பது தமிழ்நாட்டிற்கு பெருமை; இந்தியாவின் பக்கம் உலகத்தையே பார்க்க வைத்த விஞ்ஞானிகள் இங்கு அமர்ந்திருக்கிறார்கள்”..
இத்தகைய பெருமையை இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் ஏற்படுத்திக் கொடுத்த – ஏற்படுத்திக் கொடுக்கப் போகும் மேதைகளாக இந்த ஒன்பது விஞ்ஞானிகளுக்கும் தமிழ்நாடு அரசின் சார்பில் – ஒவ்வொருவருக்கும் 25 லட்சம் ரூபாய் வழங்குகிறோம் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்கள் அறிவுக்கான அளவுகோல் ஏதுமில்லை. உங்கள் உழைப்புக்கான அங்கீகாரத்தின் அடையாளமாக தமிழ்நாடு அரசு இந்தத் தொகையை வழங்குகிறது. இதனை ஏற்றுக் கொண்டு – மேலும் மேலும் இந்தியாவுக்காக உழைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
அறிவியல் திறனுள்ள மாணவர்களையும் உருவாக்க நினைக்கிறோம். அதற்கான அறிவிப்பை இந்த மேடையில் வெளியிடுவது மிகமிக பொருத்தமாக அமையும் எனக் கருதுகிறேன். பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு விஞ்ஞான கண்டுபிடிப்பு ஆர்வத்தை உருவாக்க இந்த திட்டத்தை செயல்படுத்தப் போகிறோம்.
7.5 விழுக்காடு ஒதுக்கீட்டின் கீழ் அரசு கல்வி உதவித்தொகைப் பெற்று இளநிலை பொறியியல் படிப்பினை முடித்து, முதுநிலை பொறியியல் படிப்பினை தொடரும் 9 மாணவர் களுக்கு சாதனைவிஞ்ஞானிகளின் பெயரில் அமைக்கப்படும் உதவித் தொகை வழங்கத் திட்டமிட்டுள்ளோம். இதன்மூலம் அவர்களின் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து கட்டணங்களும் வழங்கப்படும். அம்மாணவர்கள், விஞ்ஞானிகளின் தலைமையில் அமைக்கப்படும் குழுக்களால் தேர்வு செய்யப்படுவர்.
இக்கல்வி உதவித்தொகைக்காக, ரூ.10.00 கோடியில் தொகுப்பு நிதியம் ஒன்று உருவாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு கூறினார்.
முன்னதாக தமிழ்நாட்டைச் சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு பத்திரம், நினைவுப் பரிசு வழங்கினார். ஒவ்வொரு விஞ்ஞானிகளின் சாதனைகள் குறித்தும் சில நிமிட குறும்படம் ஒளிபரபரப்பட்டு கவுரவிக்கப்பட்டனர்.