சென்னை: சென்னை அருகே கடத்தப்பட இருந்த ரூ. 25கோடி மதிப்பிலான  பச்சைகல் லிங்கம் சிலை தடுப்பு காவல்துறையால் மீட்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பூந்தமல்லி அருகே தொன்மையான  பச்சைகல் லிங்கமொன்று பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும், அது வெளிநாட்டுக்கு கடத்தப்பட உள்ளதாக வும் சிலை தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து,  சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல்துறை இயக்குநர்  ஜெயந்த் முரளி  அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து அங்கு சென்ற  சிலை திருட்டு தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் தலைமையில் காவல்துறையினர் இடத்துக்கு மாறுவேடத்தில் சென்றனர். அங்கு கடத்தல்காரர்களிடம், சிலை வாங்கும் வியாபாரிகள் காட்டிக்கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கடத்தல்காரர்கள்  மரகத சிலைக்கு விலை  25 கோடி ரூபாய் என்று கூறியுள்ளனர்.  தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, சிலை கடத்தல்காரர்கள், விற்பனைக்கு வைத்திருந்த சிலையை காண்பித்தனர். அதை உறுதி செய்த காவல்துறையினர், சிலை கடத்தல்காரர்களை அதிரடியாக கைது செய்தனர்.

விசாரணையில்,  சிலையை விற்க முயன்றவர்கள்  சென்னை வெள்ளவேடு புதுகாலணியை சேர்ந்த பக்தவச்சலம் (எ) பாலா (வயது 46) மற்றும் சென்னை புதுசத்திரம் கூடப்பாக்கம் கலெக்டர் நகரை சேர்ந்த பாக்கியராஜ் (வயது 42)  என்பது தெரிய வந்தது. அவர்களிடம் விசாரணை நடத்தி சிறையில் அடைத்தனர்.

சிலை கடத்தல்காரர்களிடம் இருந்து  கைப்பற்றப்பட்ட அந்த பச்சை கல் லிங்கத்தில், உலோகத்தால் ஆகிய நாகாபரணம் உள்ளது. அதை தாங்கி அதன் பின்புறம் பறக்கும் நிலையில் கருடாழ்வர் சுமார் 29 செ.மீ உயரமும் 18 செ.மீ அகலம் கொண்டுள்ளது. போலவே பீடத்தின் அடிபாக சுற்றளவு சுமார் 28 செ.மீ அளவும், அதன் எடை சுமார் 9 கிலோ 800 கிராம் எடையும் உள்ளது. அந்த பச்சை கல் லிங்கம் உயரம் சுமார் 7 செ.மீ என உள்ளது. அதன் சுற்றளவு 18 செ.மீ ஆக உள்ளது. இந்த சிலையையும் அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஒப்படைக்க உள்ளார்.

இந்தச் சிலையானது 500 ஆண்டுகள் தொன்மையானது எனவும் லிங்கத்தின் கீழே சிவபெருமானின் ஐந்து முகங்கள் ஆயுதங்களுடன் பொறிக்கப்பட்டுள்ளது எனவும் சொல்லபடுகிறது. இதிலுள்ள நாகத்தின் பின்புறம் கருடாழ்வார் கைகளை தூக்கிய வண்ணம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த அம்சங்கள் யாவும் நேபாள பாணியில் ஆனது என்று சொல்லப்படுகிறது.