சென்னை: சென்னையில் இருந்து சொகுசு கப்பல் மூலம் ஆழ்கடல் பகுதிக்கு சென்று திரும்பும் வகையில் சுற்றுலா திட்டம் மற்றும் சாகச சுற்றுலாவை முறைப்படுத்த புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதாக  சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்து உள்ளார்.

 தமிழக சட்டப்பேரவை மானிய கோரிக்கை விவாதத்தின்பேது பேசிய அமைச்சர் மதிவேந்தன், சென்னையில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களை இணைக்கும் எங்கும் ஏறலாம் எங்கும் இறங்கலாம் என்ற திட்டத்திற்கு ரூ 1.50 கோடி மதிப்பீட்டில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். குற்றாலம் நவீன வசதிகளுடன் ரூ 15 கோடியில் மேம்படுத்தப்படும். சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் திருப்பதி சுற்றுலாவுக்கு தினசரி தரிசன நுழைவுச் சீட்டை 1000 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். திருவள்ளூர் சிலைக்கு செல்ல கன்னியாகுமரியில் ரூ 7 கோடி மதிப்பில் கூடுதலாக புதிய படகு இறங்குதளம் அமைக்கப்படும். கன்னியாகுமரி முட்டம் கடற்கரை, திற்பரப்பு நீர் வீழ்ச்சி, சுற்றுலா தலங்கள் ரூ 6.60கோடியில் மேம்படுத்தப்படும். வண்டலூர், கோவளம், ஏற்காடு சுற்றுலாத் தலங்களில் ரூ.75 லட்சம் மதிப்பில் சிறு உணவகங்கள் அமைக்கப் படும் என பல அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தவர்,  சென்னையில் இருந்து சொகுசு கப்பல் மூலம் ஆழ்கடல் பகுதிக்கு சென்று திரும்பும் வகையில் சுற்றுலா திட்டம் வடிவமைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். இந்த திட்டம் ஜூன் மாதம் நடைமுறைக்கு வரும் என்றும், சென்னை துறைமுகத்தில் இருந்து கப்பலில் ஆழ்கடல் பகுதிக்கு சென்று திரும்பும் வகையில் சுற்றுலா அமைக்கப்படும் என்றவர்,  2 நாள் சொகுசு கப்பல் சுற்றுலா திட்டம் முதல்வரால் தொடங்கி வைக்கப்பட உள்ளது. விசாகப்பட்டினம் – சென்னை வழியாக புதுச்சேரி செல்லும் சொகுசு கப்பல் பயணத் திட்டமும் விரைவில் தொடங்கப்படும் என்று  குறிப்பிட்டார்.

மேலும்,  தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலாத் தளங்களுக்கு பல்வேறு ஏஜென்சிகள் சுற்றுலா பயணிகளை அழைத்து சென்று வருகின்றனர். இதை முறைப்படுத்த அரசு திட்டமிட்டு வருகிறது. சாகச சுற்றுலா என்றால் டிரக்கிங், பாராஜூட் போன்ற சாகச பயணங்கள் செய்வதற்கு பயணிகள் விரும்புகின்றனர். ஆனால், சுற்றுலா தளங்களில் எவ்வித விதிமுறைகளும் கடைபிடிக்காமலும் போலியான ஏஜென்சிகளும் மூலமாக சுற்றுலா பயணிகளை ஏமாற்றுகின்றனர். எனவே இதை முறைப்படுத்தவும், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை வகுக்கப்பட்டுள்ளதாகவும், இது விரைவில் வெளியிடப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.