டெல்லி: ரூ.217 கோடி மதிப்புள்ள நிலத்தை வீட்டு வசதி வாரியம் கையகப்படுத்தியது செல்லும் என 33ஆண்டு வழக்கில் உச்சநீதிமன்றம் தமிழ்நாடு அரசுக்கு சாதகமாக தீர்ப்பு அளித்து உள்ளது.
கோவையில் சுமார் ரூ.217 கோடி மதிப்புள்ள 11.95 ஏக்கர் நிலத்தை வீட்டு வசதி வாரியம் கையகப்படுத்தியதை எதிர்த்து 2008ல் தொடரப்பட்ட வழக்கில், உச்சநீதிமன்றம், அரசின் உத்தரவு செல்லும் என்று சுமார் 33 ஆண்டுகளுக்குபிறகு தீர்ப்பு அளித்து உள்ளது.
1988ல் வீட்டு வசதி வாரிய திட்டத்துக்காக சவுரிபாளையம் கிராமத்தில் 11.95 ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்தியது. இந்த நிலத்தின் உரியைமாளர்களான கோவை சிங்காநல்லூரைச் சேர்ந்த ராஜேந்திரன், ரவீந்திரன் ஆகியோர் அரசின் உத்தரவை எதிர்த்து, 2008-ல் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி நிலம் கையகப்படுத்திய நடவடிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டார். தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவையும் 2 நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து வீட்டு வசதி வாரியம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கின் விசாரணையைத் தொடர்ந்து, கோவையில் சுமார் ரூ.217 கோடி மதிப்புள்ள 11.95 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியது செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உத்தரவு பிறப்பித்தது.
33 ஆண்டு சட்டப் போராட்டத்துக்குப் பிறகு வீட்டு வசதி வாரியம் நிலத்தை மீண்டும் கைப்பற்றி உள்ளது.