ராஞ்சி: சத்திஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற ரூ.2,100 கோடி மதுபான ஊழல் வழக்கில், மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகம் மற்றும் முன்னாள் அமைச்சரின் ரூ.6கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. இது பா.ஜ.க-வின் அரசியல் சதி என்று சத்தீஸ்கர் காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.

சத்தீஸ்கரில் முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில்ரூ.2,100 கோடி மதிப்பிலான மதுபான ஊழல் நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இதன்மீதான பணமோசடி வழக்கின் முக்கிய நடவடிக்கையாக, சத்திஷ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டத்திலுள்ள காங்கிரஸ் பவன் அலுவலகத்தை அமலாக்கத்துறை முட்க்கி உள்ளது.
அத்துன் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கவாசி லக்மாவின் ராய்ப்பூர் இல்லம், மற்றும் அவரது மகன் ஹரீஷ் கவாசியின் சுக்மா இல்லம் என மொத்தம் ரூ.6.15 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கியுள்ளது.
ஒரு அரசியல் கட்சியின் சொத்து பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் முடக்கப்படுவது இதுவே முதல் முறை என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை பா.ஜ.க-வின் அரசியல் சதி என்று சத்தீஸ்கர் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. சுக்மா அலுவலகம் கட்டப்பட்டதற்கான ஒவ்வொரு பைசாவின் கணக்கையும் சமர்ப்பிக்கத் தயாராக இருப்பதாகவும் காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.