சென்னை:

ழை மக்களுக்கு தமிழக அரசு ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதி வழங்குவதாக அறிவிக்கப்பட்ட திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக தமிழக அரசு சென்னை உயர்நீதி மன்றத்தில் தெரிவித்து உள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் வருவதை தெரிந்துகொண்ட அதிமுக அரசு, வாக்காளர்களை கவரும் வகையில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிப்பவர்களுக்கு ரூ.2000 வழங்கப்படும் என்று கடநத் ஜனவரி மாதம் அறிவித்து, அதற்கான பணிகளையும் முடுக்கி விட்டது.

இந்த திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றுவதற்குள்  தேர்தல் ஆணையம் தேர்தல் தேதி அறிவிப்பை வெளியிட்டதால், சிறப்பு நிதி வழங்குவது தடை செய்யப்பட்டது.

இதற்கிடையில், 2000 ரூபாய் நிதியுதவி திட்டத்துக்கு தடை விதிக்க கோரி விழுப்புரத்தை சேர்ந்த கருணாநிதி என்பவர் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், தமிழக அரசு  முதலில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிப்பவர்களுக்கு உதவித்தொகை வழங்கப் படும் எனக் கூறியது, பின்னர், தேர்தல் ஆதாயத்திற்காக குடும்ப அட்டைதாரர்கள் அனைவரின் விவரங்களையும் சேகரிக்கும் வகையில்  படிவங்களை விநியோகித்து வருகிறது… இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறினார்,

இந்த வழக்கு சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.  அதையடத்து,  பயனாளிகளை கண்டறிய சரியான நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளதாக கூறி மனுவை தள்ளுபடி செய்தது.

ஆனால், அரசாணையை திருத்தி அதிகாரிகள் வெளியிட்டுள்ளதாக மீண்டும் கருணாநிதி தரப்பில் புது மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கையும் ஏற்கனவே விசாரித்த  மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் அமர்வே விசாரணை நடத்தியது. அப்போது,, மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது வரைவு அரசாணை என்றும், அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டதே இறுதி அரசாணை என்றும் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து,  மக்களவை தேர்தல் காரணமாக, 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதியுதவி வழங்குவதும், அதற்கான கணக்கெடுக்கும் பணியும் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை தேர்தலுக்கு பின்னர் தள்ளி வைத்தனர்.