சென்னை:

மிழகத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் ஏழை மக்களின் குடும்பத்துக்கு ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதி வழங்கப்படும் என அறிவித்த தமிழக அரசு,  இன்று சிறப்பு நிதிஉதவி திட்டத்தை தொடங்கி வைத்துள்ளது.

இந்த சிறப்பு நிதி உதவித்திட்டம் நாடாளுமன்ற தேர்தலுக்காக அதிமுக அறிவித்து இருப்பதாக திமுக உள்பட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன. இந்த நிதி வழங்குவதை தடை செய்ய வேண்டும் என்று  சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்த நிலையில், அதிமுக அரசின் சிறப்பு நிதி  உதவி திட்டத்திற்கு எதிராக தலைமைத் தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் மனுவுடன் ஒரு சிடியையும்  அனுப்பி உள்ளது.

திமுக சார்பாக, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி அனுப்பி உள்ள புகார் மனுவில், மக்களின் வாக்குகளுக்காகவே சிறப்பு நிதி வழங்குவதாக அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் வைகைச் செல்வன் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பேச்சை மேற்கோள் காட்டி, அவரது பேச்சு அடங்கிய சிடியும் புகார் மனுவுடன் இணைக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த திட்டம்,  தேர்தல் ஆதாயத்திற்கான திட்டம் என்றும், வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்பவர்களுக்கு பயன்படப் போவதில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

எனவே மக்களவைத் தேர்தலை நேர்மையாக நடத்துவதை உறுதிப்படுத்த சிறப்பு நிதி அளிக்கும் திட்டத்தை தடுடுத்து நிறுத்த வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.