சென்னை:
கிராமப்புற பகுதிகளுக்கு அதிவேக இணையதள சேவை அளிக்கும் தமிழக அரசின் பாரத் நெட் திட்ட டெண்டர்களை மத்தியஅரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது. டெண்டர்மீது ஏராளமான புகார்கள் எழுந்த நிலையில், அதை நிறுத்தி வைக்க ஏற்கனவே உத்தரவிடப்பட்ட நிலையில், தற்போது டெண்டர்களை ரத்து செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.
பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் இணையதள வசதி ஏற்படுத்தும் வகையில், தமிழக அரசு பைபர் ஆப்டிக் கேபிள் அமைப்பது தொடர்பாக ரூ 2000 கோடி மதிப்பிலான டெண்டர் விடுவதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத்துறை செய்து வந்தது.
இந்த டெண்டரில் ஊழல் அரங்கேற்றுவதற்கான வேலைகள் நடந்திருப்பாகவும், பல்வேறு மாற்றங்கள் செய்துள்ளதாகவும் அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியது. இதைத்தொடர்ந்து, புகாரின் பேரில் இது நிறுத்தி வைக்கப்படுவதாகவும், புகார் மீது விசாரணை நடத்தி முடிவுக்கு வந்தபின் டெண்டர் திரும்ப விடப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், டெண்டரையே முழுமையாக ரத்து செய்து மத்தியஅரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.