மதுரை: மதுரை மாநகராட்சி  வரி விதிப்பு முறைகேடு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் மாநகராட்சி யின் மண்டல தலைவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மதுரையில்,  அதிமுக சார்பில் சொத்துவரி முறைகேட்டை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ள நிலையில், இந்த முறைகேடு விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய நெருக்கடி காரணமாக திமுக அரசு 6 மண்டல தலைவர்களை ராஜினாமா செய்ய வைத்துள்ளது.

மதுரை மாநகராட்சிக்கு ரூ 200 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பீடு ஏற்படுத்தி வரி விதிப்பில் மோசடி செய்த புகாரில் மாநகராட்சி ஊழியர்கள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

மதுரையில் பல கோடி வரிவிதிப்பு ஊழல்  மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.  அங்கு திமுக மேயர் இந்திராணி தலைமையிலான மாநகராட்சி செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே இந்திராணியின் கணவர் மாநகராட்சி விஷயங்களில் தலையிடுவதாக கூறி பெரும் பிரச்சினை ஏற்பட்டது. இந்த நிலையில், மதுரை மாநகராட்சிக்கு உட்பட்டப குதிகளில் வரிவிதிப்பு தொடர்பாக பல கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி,   ஓய்வு பெற்ற உதவி கமிஷனர், மண்டலம் 3ன் தலைவரின் நேர்முக உதவியாளர் உட்பட 8 பேரை கைது செய்தது. இது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து திமுக தலைமை தரப்பில், அமைச்சர் நேரு தலைமையில் விசாரணை நடத்தப்பட்டடது. அமைச்சர்கள் நேரு, சிவசங்கர், பிடிஆர், மாவட்ட ஆட்சியர் உள்பட பலர் தலைமையில் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையானது, மாநகராட்சி  மேயர் இந்திராணி, மண்டல தலைவர்கள் பாண்டிச்செல்வி, சரவணபுவனேஸ்வரி, சுவிதா, வாசுகி, முகேஷ் சர்மா ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்.

இதைத்தொடர்ந்து 6 மண்டல தலைவர்களை ராஜினாமா செய்ய திமுக தலைவரான முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்பேரில், மதுரை மாநகராட்சியில் 4 மண்டல தலைவர்கள், 2 நிலை குழு தலைவர்கள் ராஜினாமா செய்தனர்.

மதுரை மாநகராட்சி வரி விதிப்பு ஊழல் தொடர்பாக,   போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்ட 2 பேர் கொடுத்த ஆதாரங்கள், மாநகராட்சி ஊழியர்கள் அளித்த தகவல்கள், சொத்துவரி மட்டுமல்லாது மேலும் சில முறைகேடுகள் தொடர்பாகவும் பொதுமக்கள் ரகசியமாக அனுப்பிய ஆதாரங்கள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு போலீஸார் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.