சேலம்:
சேலத்தில் பொதுமக்களிடம் ரூ. 1லட்சம் டெபாசிட் செய்தால் மாதம் ரூ.20 ஆயிரம் வட்டி என மோசடி என பணம் வசூலித்து, ரூ.90 கோடி அளவில் மோசடி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
ஜஸ்ட் வின் ஐடி இந்தியா பிரைவேட் லிமிடெட், ஜஸ்ட் வின் டெக்னாலஜி என்ற நிறுவனம் சேலம் புதிய பஸ் நிலையம் அருகே இயங்கி வருகிறது. இதற்கு பல கிளைகளும் உள்ளன. இந்த நிறுவனத்தின் சார்பில் அவ்வப்போது பொதுமக்களுக்கு கவர்ச்சிகரமான அழைப்பு விடுத்துள்ளதுடன், ரூ.1 லட்சம் தங்களது நிறுவனத்தில் டெபாசிட் செய்தால் மாதம்தோறும் ரூ.20 ஆயிரம் வட்டி கிடைக்கும் என கூறியது.
இதை உண்மை என நம்பி ஏராளமானோர், ஜஸ்ட் வின் நிறுவனத்தில் தங்களது சேமிப்புகளைக் கொட்டி, அதிக வட்டிக்கிடைக்கும் என ஆ….வென எதிர்பார்த்துக் கிடந்தனர்.
ஆனால், போகப்போகத்தான் தெரிந்தது, இது ஒரு டுபாக்கூர் நிறுவனம்-… அந்த நிறுவனம் மக்களிடம் உறுதி அளித்தது போல இதுவரை யாருக்கும் வட்டித்தொகை தராத நிலையில், சின்னதிருப்பதியை சேர்ந்த சிவா என்பவர், சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இதன்பிறகே இந்த நிறுவனத்தின் முறைகேடு வெளிச்சத்துக்கு வந்தது.
பின்னர் இந்த வழக்கு சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டு விசாரணை தொடங்கியது. அப்போதுதான் அந்த நிறுவனத்தின் பித்தலாட்டம் முழுமையாக தெரிந்தது. சுமார், 9 ஆயிரம் பேரிடம் தலா ஒரு லட்சம் வீதம் 90 கோடி ரூபாய் அளவுக்கு பணம் அந்த நிறுவனம் சுருட்டி, மோசடி செய்துள்ளது அம்பலமானது.
இதைதொடர்ந்து, அந்த பைனான்ஸ் நிறுவனத்தை நடத்தி வந்த சேலம் தாதகாப்பட்டி பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியம், சுப்பிரமணி ஆகியோரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
மேலும் அவர்களுடன் இணைந்து நிறுவனத்தை நடத்தி வந்த வினோத்குமார் என்பவரையும் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.