திருச்சி: திருச்சி அருகே பட்டா மாற்ற லஞ்சம் ரூ.2 லட்சம் வாங்கிய  வருவாய் துறை ஊழியர் கையும் களவுமாக சிக்கினார். விசாரணையில், அவர்  வட்டாட்சியரின் நேர்முக உதவியாளர்  என்பது தெரிய வந்துள்ளது. இவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூரைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவரின் உறவினருக்குச் சொந்தமான சுமார் 11,000 சதுர அடி நிலம், திருச்சி கே. சாத்தனூர் பகுதியில் உள்ளது. அந்த இடம் தொடர்பான பட்டா ஆவணங்களில், அது மாநகராட்சிக்குச் சொந்தமான இடம் எனத் தவறாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது தொடர்பாக, அந்த நிலம் தனக்கானது எனவும், அதற்கான ஆவணங்கள் தன்னிடம் இருப்பதாகவும் கூறி, கிருஷ்ணகுமார் திருச்சி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை அணுகினார். அந்த இடத்தை கிருஷ்ணகுமாரின் பெயருக்கு ‘கணிப்பொறி எஸ்.எல்.ஆர்.இ’ (Computer SLRE) ஆவணத்தில் மாற்றித் தர லஞ்சம் வேண்டும் என்று வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் அண்ணாதுரை கேட்டுள்ளார். எவ்வளவு என வினவியபோது, அவர் ரூ. 2 லட்சம் லஞ்சம் தர வேண்டும் என்று உறுதியாகக் கூறியுள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத கிருஷ்ணகுமார், லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் அளித்தார். கிருஷ்ணகுமாரின் புகாரின் அடிப்படையில், லஞ்சஒழிப்புத் துறையினர் பொறி வைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

அதன்படி, திருச்சி ஆட்சியர் அலுவலகத்திற்குப் பின்புறம் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், கிருஷ்ணகுமார் 2 லட்சம் ரூபாயை அண்ணாதுரையிடம் கொடுத்தபோது, லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் கையும் களவுமாகப் பிடித்தனர்.

லஞ்ச ஒழிப்புத்துறை துணைக் கண்காணிப்பாளர் (DSP) மணிகண்டன் தலைமையிலான ஆய்வாளர்கள் சக்திவேல், பிரசன்ன வெங்கடேஷ், பாலமுருகன் மற்றும் போலீசார் அண்ணாதுரையைப் பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து, வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் துவாக்குடிமலையில் உள்ள அண்ணாதுரையின் இல்லத்திலும் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள முக்கிய அரசு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய இந்த அதிரடி ரெய்டு, திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.