டெல்லி: நாடு முழுவதும் இதுவரை 2.72 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அதாவது 76 சதவிகித நோட்டுக்கள் திரும்ப வந்துள்ளதாக கூறியுள்ளது.

நாடு முழுவதும் புழக்கத்தில் இருக்கும் ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ஆா்பிஐ கடந்த மே 19-ஆம் தேதி அறிவித்தது. அதன்படி,  நாடு முழுவதும் 2,000 ரூபாய் நோட்டுகளை வழங்குவதை உடனடியாக நிறுத்துமாறு அனைத்து வங்கிகளுக்கும் இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. அதே சமயம், அந்த ரூபாய் நோட்டு செப்டம்பர் 30ஆம் தேதிவரை செல்லுபடியாகும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் இதற்கு முன்பு ஏற்கனவே,  ரூ. 500 மற்றும் ரூ.1000 ரூபாய் நோட்டுகள் செல்லாவது என அறிவித்ருது சட்டபூர்வ வழங்கல் நிலையை ரிசர்வ் வங்கி 2016ஆம் ஆண்டில் திரும்பப் பெற்றது. பின்னர், 1934ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி சட்டத்தின் 24(1) பிரிவின் கீழ் 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம், ₹2000 மதிப்புள்ள ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. மத்திய அரசின் இந்த திடீர் நடவடிக்கையால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் தற்போது, ரூ.2000 நோட்டும் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது சலசலப்பை ஏற்படுத்தியது. முன்னதாக, 2018-19இல் ரூபாய் இரண்டாயிரம் அச்சடிப்பது நிறுத்தப்பட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்தது. இது பல சந்தேகங்களை ஏற்படுத்திய நிலையில், தற்போது ரூ.2000 நோட்டை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கி அறிவிப்பின்படி,  நாடு முழுவதும் உள்ள வங்கிக் கிளைகளில் ரூ.2,000 நோட்டுகளை மாற்றி, சில்லறையாகப் பெற்றுக் கொள்ளலாம் அல்லது வங்கிக் கணக்கில் செப்டம்பர் 30-க்குள் மாற்றிக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் சிரமமின்றி தங்களிடம் உள்ள ரூ.2000 நோட்டுக்களை மாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், ஜூன்30 வரை ரூ.2.72லட்சம் கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் வங்கிகளில் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அதாவது, மே19 முதல் இதுவரை 2,000 ரூபாய் நோட்டுகளில் 76%, மதிப்பு, அதாவது ரூ.2.72 லட்சம் கோடி  நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பி வந்துள்ளன. திரும்பி வந்த ரூ.2,000நோட்டுகளில் 87% டெபாசிட்களாகவும், மீதமுள்ள 13% மற்ற மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளாகவும் மாற்றப்பட்டுள்ளன என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.