சென்னை
அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் நடந்த சோதனையில் ரூ.2.18 கோடி பணம் சிக்கி உள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை காவலர்கள் அறிவித்துள்ளனர்.
அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறை காவலர்கள் சோதனை நடப்பதும் அப்போது கணக்கில் வராத ஏராளமான பணம், நகை, சொத்துக்கள் உள்ளிட்டவை பிடிபடுவதும் தொடர்ந்து வருகிறது. இதுவரை எம் ஆர் விஜயபாஸ்கர், சி விஜயபாஸ்கர், வேலுமணி வீரமணி உள்ளிட்ட 4 முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சோதனை நடந்தது.
இன்று காலை முதல் ஐந்தாவதாக முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான 69 இடங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை இட்டு வருகின்றனர். இந்த சோதனை இன்னும் தொடர்ந்து நடந்து வருகிறது. முன்னாள் அமைச்சர் தங்கமணி, அவர் மனைவி சாந்தி, மகன் தரணி உள்ளிட்டோர் மீது பதியப்பட்ட வழக்கின் அடிப்படையில் சோதனை நடந்து வருகிறது.
இந்நிலையில் ரூ.2.37 கோடி பணம் பிடிபட்டுள்ளதாகவும் அதில் ரூ.2.18 கோடிக் கணக்கில் வராத பணம் என்னும் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் 1,130 கிலோ தங்கம், 40 கிலோ வெள்ளி, கைப்பேசிகள், வங்கிகளின் பாதுகாப்பு பெட்டக சாவிகள், கணினிகள் முக்கிய ஆவணங்கள் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.